இயக்குனர் பாலா அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த அவன் இவன் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து புகழ்பெற்று இருந்தவர் நடிகர் ராமராஜ். அவர் தற்போது காலமான செய்தி தமிழ் திரையுலகினரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. 72 வயதான அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஷால் மற்றும் ஆர்யா ஆகியோர் இணைந்து நடித்த அவன் இவன் படத்தை பிரபல இயக்குனர் பாலா இயக்கி இருந்தார். வெற்றிப்படமான இந்த படத்தில் சில காமெடி காட்சிகளில் நடித்தவர் ராமராஜன். இவர் கூட்டுறவு வங்கியில் மேலாளராக இருந்து பணி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வு பெற்ற பின்னர் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஒரு சின்ன கிராமத்தை சேர்ந்தவர் ராமராஜன். இவர் அங்கு ஒரு கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணிபுரிந்து வந்தார். பணி ஓய்வு பெற்ற பின்னர் அவருக்கு அவன் இவன் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக காமெடி காட்சிகளில் நடித்திருப்பார். இந்த படத்தின் வெற்றிக்கு இவரது காமெடி காட்சிகளும் உதவின என்று சொன்னால் அது மறுக்க முடியாது. ஊருக்கு புதிதாக வரும் போலீஸ் அதிகாரியாக நடித்த இவர் யாரும் திருடக்கூடாது என்று கிடா வெட்டி விருந்து வைத்து சத்தியம் வாங்கும் போலீஸ் அதிகாரியாக காமெடியாக நடித்திருப்பார். முதல் படத்திலேயே இவரது எதார்த்தமான நடிப்பு மக்களை பெரிதும் கவர்ந்தது. அடுத்தடுத்து சில படங்களிலும் நடித்தார்.

72 வயதான ராமராஜன் சில மாதங்களாகவே உடல் நல குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது உடல் சொந்த ஊரான முதுகுளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளது. இன்று மாலை இறுதிச் சடங்குகள் நடைபெற்று அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. ராமராஜன் மறைவிற்கு பலரும் தங்களது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.
