சென்னையில் நடைபெற்ற 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் என்ஜாயி எஞ்சாமி பாடல் பாடப்பட்டது. இதில் பிரச்சனை என்னவென்றால், இந்த பாட்டை எழுதி, இயக்கி, நடித்து பாடிய தெருக்குரல் அறிவு என்பவர் மேடையில் இல்லாததே சர்ச்சைகளுக்கு காரணமாக ஆகியது. அறிவுடன் சேர்ந்து இதை பாடிய தீயும் ,கர்ணன் படத்தில் கண்டா வரச் சொல்லுங்கள் பாடலை பாடிய கிடாக்குழி மாரியம்மாளுமே மேடையில் இந்த பாடலை பாடினர். இது பெரும் சர்ச்சைக்கு உள்ளானது. இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று அறிவு ஒரு விளக்கத்தை கொடுத்திருந்தார். அதில் நான் ஆறு மாத காலமாக தூங்காமல் இந்த பாடலை எழுதினேன், நாம் தூங்கும் நேரத்தில் நம்முடைய பொக்கிஷங்களை அபகரித்துக் கொள்வார்கள் எனவும், விழித்திருக்கும் நேரத்தில் அவர்களால் முடியாது எனவும், உண்மை ஒருநாள் வெல்லும், ஜெய் பீம் என அவர் பதிவிட்டிருந்தார்.

அவரின் விளக்கத்தை கேட்ட நெட்டிசன்கள் பலரும், அறிவை வேண்டுமென்றே புறக்கணித்ததாக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தீயின் தந்தையும் மியூசிக் டைரக்டர்மான சந்தோஷ் நாராயணன் ஒரு விளக்கத்தை அளித்துள்ளார். அதில் அவர் ஒருமுறை தீ தன்னிடம் வந்து இந்த பாடலின் ஐடியாவை சொன்னபோது, தானும் இதில் மிகுந்த ஈடுபாடு கொண்டதாகவும், நமது தமிழ், கலாச்சாரம் பற்றி இருந்ததால் இந்தப் பாட்டில் நானும் கலந்து கொண்டேன் என்று அவர் கூறினார். பாடலுக்கான ரெக்கார்டிங், சூட்டிங் எல்லாம் சேர்த்து முப்பது மணி நேரத்தில் இந்த பாடலை பதிவு செய்து முடித்ததாகவும் கூறினார். மேலும் இந்த பாடலின் மூலம் வந்த வருமானத்தை தானும், தீயும், அறிவும் மூன்று பேரும் சமமாக பிரித்துக் கொண்டதாகவும் சந்தோஷ் நாராயணன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

மேலும் அறிவுக்கும் தமக்கும் எந்த பிரச்சனையும் இல்லை, அவர் செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருந்ததால் அவரால் வர முடியாத சூழ்நிலை இருந்ததாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்ததாக சந்தோஷ் நாராயணன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அறிவு ஒரு அற்புதமான கலைஞர், வெற்றிமாறனின் அனல் மேலே பனித்துளி படத்தில் அவர் பாடிய கீச்சே கீச்சே என்ற பாடல் மிக அருமையாக வந்துள்ளது. எஞ்சாமி பாடல் போலவே அதுவும் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று அவர் தனது அறிக்கையில் கூறியுள்ளார். மேலும் அவர் முடிக்கும் பொழுது “வாங்கோ வாங்கோ ஒன்னாகி” என்று முடித்துள்ளார். இதன் மூலம் தனக்கும், தன்னுடைய மகளுக்கும் அறிவு உடன் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் விளக்கமாக விளக்கியிருக்கிறார். இந்தப் பிரச்சனை எழுவது இது முதல் முறை அல்ல. ஏற்கனவே ஒரு ஆங்கில பத்திரிக்கை இந்த பாடலைப் பற்றிய கட்டுரையில் எழுதும் போது அறிவு படத்தை விட்டு விட்டு தீ மற்றும் பிற்பாடுகள் படங்களை மட்டுமே பகிர்ந்து இருந்தது.

இதனால் நெட்டிசன்கள் கோபமான நிலையில், டிஜிட்டல் பதிப்பில் அறிவு படத்தையும் சேர்த்திருந்தது. அப்போதே பா. ரஞ்சித், அறிவு ஒரு பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் என்பதால் இவ்வாறு புறக்கணிக்கிறார் என்று கடுமையான கண்டனங்களை தெரிவித்து இருந்தார். தற்போது மீண்டும் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் அவரது குரல் மட்டுமே ஒலித்தது. அவரை அழைக்கவில்லை என்ற காரணத்தால் அவருடைய ரசிகர்கள் கோபத்தில் இருப்பதாக தெரிகிறது. பா ரஞ்சித் சொன்ன கருத்து உண்மைதானோ என எண்ண வைக்கும் அளவிற்கு புறக்கணிப்புகள் நடைபெறுவது வேதனை அளிப்பதாக இருக்கிறது.
