இன்றைய டிஜிட்டல் உலகில் திரைப்படங்கள் வெளியான அன்றே படத்தை முதல் காட்சியை பார்த்துவிட்டு படம் குறித்த விமர்சனங்களை பலரும் youtube இல் பதிவேற்றி வருகின்றனர். அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தயாரிப்பாளர் சங்கம் தற்போது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது. படம் வெளியாகி மூன்று நாட்களுக்குப் பிறகுதான் படம் குறித்த ரிவ்யூசை போட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது. யூட்யூபில் பணம் சம்பாதிக்கும் நோக்கில் பலரும் சேனல்களை தொடங்கி திரை விமர்சனங்களை போட்டு வருகின்றனர். இதை பார்க்கும் பலரும் படம் நன்றாக இருக்கிறது, இல்லை என்று முடிவு செய்துவிட்டு தியேட்டர்களுக்கே வருவதில்லை. இதனால் முன்னணி நடிகர்கள் பலரின் படங்கள் ஓடாமலேயே, ஒரு வாரத்தில் எல்லாம் தூக்கும் நிலைமை ஏற்பட்டு வருகிறது. இதற்கு முடிவு கட்டும் விதமாக தற்போது தயாரிப்பாளர் சங்கம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி இருக்கிறது.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் பொதுக்குழு கூட்டம் ஆண்டுதோறும் நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டிற்கான பொது குழு கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் கலைஞர் அரங்கில் நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர்கள் கலந்து கொண்டனர். அங்கு முக்கியமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமான ஒன்றுதான் திரைப்படங்களின் விமர்சனங்களை படங்கள் ரிலீஸ் ஆகி மூன்று நாட்களுக்கு பின்னர் வெளியிட வேண்டும் என்பது. இந்த தீர்மானத்தால் அந்த கூட்டத்தில் சற்று சலசலப்பு ஏற்பட்டது. சமீப காலமாக படங்களின் வெற்றி தோல்வியை தீர்மானிப்பதில் விமர்சனங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒரு படம் ரிலீஸ் ஆனால், அதன் 4 மணி காட்சி முடிந்ததுமே அந்த படம் எப்படி இருக்கிறது என்று விமர்சனங்கள் இணையத்தில் நிரம்பி வழிகின்றன. இந்த விமர்சனங்களால் வசூல் பாதிக்கப்படுவதாக தயாரிப்பாளர்கள் தரப்பில் புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தன.

மேலும் படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்களிடம் படம் எப்படி இருக்கிறது என்று மைக்கை நீட்டி கேள்வி கேட்பவர்களையும் இனிமேல் தியேட்டருக்குள் அனுமதிக்க கூடாது என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனால் youtube அவர்கள் பலரும் கலக்கமடைந்துள்ளனர். பல youtube சேனல்கள் திரைவிமர்சனத்தை நம்பித்தான் காலத்தை ஓட்டி வருகின்றனர். இன்னும் சிலரோ நேரடியாக மைக்கை எடுத்துக்கொண்டு தியேட்டரில் படம் பார்த்துவிட்டு வெளியே வருபவர்களிடம் கருத்து கேட்டு, அதை வீடியோவாக வெளியிட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர். இப்போது தயாரிப்பாளர் சங்கம் போட்டுள்ள தீர்மானத்தால் அடுத்து என்ன நடக்க இருக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
