ரவீந்தர் மகாலட்சுமிக்கு ஆதரவாகவும், செய்தியாளர் முக்தாருக்கு எதிராகவும் இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்திருக்கிறார். சமீப காலமாக வைரல் ஜோடிகளாக வலம் பெறுபவர்கள் ரவீந்தர் மகாலட்சுமி. இவர்கள் இருவரும் முதல் திருமணத்தை விவாகரத்து செய்துவிட்டு, இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளனர். இதனால் சமூக வலைத்தளங்களில் இவர்களுக்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் ரவீந்தர் மகாலட்சுமி பல தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வந்தனர். அதில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு இவர்கள் அளித்த பேட்டி மிகவும் வைரலானது. செய்தியாளர் முக்தார் ரவீந்தர் மற்றும் மகாலெட்சுமியின் முகத்தில் அறைந்தார் போல் பல கேள்விகளை கேட்டார். மேலும் நடு நடுவே அவர்களை கேலியும் கிண்டலும் செய்யும் விதத்தில் கேள்விகளை கேட்டார்.

செய்தியாளர் முக்தாருக்கு இது ஒன்றும் புதிது இல்லை. அவர் அரசியல்வாதிகளையும் இவ்வாறு தான் கேள்வி கேட்கிறார். அதனால் முக்தாரை பலரும் திட்டி தீர்த்து வருகின்றனர். சமீபத்தில் லைவில் வந்த ரவீந்தர் கூட முக்தார் சில தரம் தாழ்ந்த கேள்விகளை கேட்டார். ஆனால் அதை எடிட்டிங் செய்து விட்டார் என்று பேசி இருந்தார். இது குறித்து தற்போது கருத்து தெரிவித்துள்ள இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் முக்தாரை கடுமையாக சாடியிருக்கிறார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சத்தியம் தொலைக்காட்சியில் முக்தர் என்பவர் பிரபலங்களை நேர்காணல் செய்துவருகிறார். சமீபத்தில்தான் இவரது ஒன்றிரண்டு சந்திப்புகளைப் பார்த்தேன்.

நேரடியாக முகத்தில் அடித்தாற்போல் வெட்டவெளிச்சமாக கேள்விகளைக் கேட்கிறாரே; பரவாயில்லையே, ரொம்ப நாளைக்குப் பிறகு துணிவான ஒருவர் வந்திருக்கிறாரே என்று முதலில் வியந்து பார்த்தேன். ஆனாலும் சமயத்தில் கொஞ்சம் எல்லைமீறுகிறார், மக்கள் மத்தியில் பேசப்படவேண்டுமென்கிற ஆவலில் கொஞ்சம் முதிர்வின்றிப் பேசிவிடுகிறார் என்றும் கூடவே தோன்றியது. அவர் தயாரிப்பாளர் ரவீந்திரனையும் அவர் மனைவியையும் நேர்காணல் செய்ததின் promo-வை சில நிமிடங்களுக்கு முன் facebook-ல் பார்த்தேன். ரவீந்திரன் சமீபத்தில் திருமணம் செய்துகொண்டிருக்கிறார் என்பதை அதன் மூலம் அறிந்துகொண்டேன்.

அவரிடமும் அவர் புது மனைவியிடமும் கொஞ்சமும் பண்பில்லாமல் ஒரு பத்திரிகையாளர் என்பதையும் தாண்டி அவர் கேட்ட அநாகரிகமானக் கேள்விகளும், அவர் கொட்டிய கொஞ்சம் கூட அறிவு வளராத முதிர்ச்சியற்ற கேவலமான விமர்சனங்களும் அவரின் பண்படாத தன்மையைக் காட்டியது. இவர் இதற்கு மன்னிப்பு கேட்கவில்லை என்றால் மக்களிடம் வாங்கப் போகிறார். பொறுத்திருந்துப் பாருங்கள். பேட்டி எடுப்பவர் தான் அறிவாளி என நினைத்துக்கொள்வதோ, மற்றவரெல்லாம் முட்டாள்கள் என நினைப்பதோ பிரச்சனையில்லை. ஆனால் அதை நிரூபிக்க முயற்சி செய்தால் அசிங்கப்பட்டுப் போவார்கள். அதை இவர் விரைவில் விளங்கிக் கொள்வார்.

நயமாக, நிதானமாக, சூசகமாக, சாதுர்யமாக, அமைதியாக கேள்விகளைக் கேட்டு எதிரில் இருக்கும் பிரபலம் ஆடிப்போய் வேர்த்து விறுவிறுத்து திணறித் தவித்துப் போவதை சன் டி.வி.யில் தொடக்க நாட்களில் ரபி பெர்னார்ட் எப்படித் திறம்படச் செய்தார்! அதையெல்லாம் கொஞ்சமாவது பார்த்துக் கற்றுக்கொள்ள வேண்டாமா? தொழில் நுட்பம் எல்லார் கைகளிலும் மலிவாகக் கிடைத்துவிட்டது என்பதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாமா? இதை சத்தியம் தொலைக்காட்சி செய்வது வேதனைக்குரிய விஷயம். சுவிஷேஷப் பணியை ஒருபுறமும் இதைப்போன்ற தரமற்றத் தயாரிப்புகளை மறுபுறமும் செய்வது முரண் என்று காட்டமாக பதிவிட்டுள்ளார்.