பின்னணி பாடகி சின்மயி தான் கர்ப்பமாக இருந்தபோது எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும், தற்போது தன்னுடைய இரட்டை குழந்தைகளுக்கு பாலூட்டும் புகைப்படத்தையும் தனது instagram பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார். வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக அவர் மீது குற்றச்சாட்டுகள் வைத்த நிலையில், கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்திருக்கிறார் சின்மயி. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் வரும் தெய்வம் தந்த பூவே என்ற பாடலை பாடியதன் மூலமாக திரைத்துறையில் அடி எடுத்து வைத்தவர் பின்னணி பாடகி சின்மயி. முதல் பாடலிலேயே இவர் புகழின் உச்சிக்கு சென்றார். இதன் பின்னர் இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றி அடைந்தது. தன்னுடைய இனிதான குரலால் பலரின் உள்ளங்களை கவர்ந்தார் சின்மயி.

சிறுவயதிலேயே இசை மீது இருந்த ஆர்வத்தால் இவர் கர்நாடக இசை, இந்துஸ்தானி போன்ற கலைகளை முறையாக கற்றுத் தேர்ந்தார். இசைத்துறையில் தனக்கென தனி முத்திரை பதித்திருக்கிறார். ஆனால் இவர் சில காலமாக மீ டு பிரச்சனையில் வைரமுத்து மீது வைத்த குற்றச்சாட்டு காரணமாக இவருடைய பின்னணி பேசும், மற்றும் பாடும் வாய்ப்புகள் வெகுவாக குறைந்தது. டப்பிங் இண்டஸ்ட்ரியில் இருந்து இவரை நீக்கியும் விட்டனர். ஆனாலும் மனம் தளராமல் பல்வேறு கச்சேரிகள், மேடைகள் என தொடர்ந்து பாடி வருகிறார். சோசியல் மீடியாவில் மிக ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வபோது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். இவருக்கு 2017 ஆம் ஆண்டு நடிகர் ராகுல் உடன் திருமணம் நடைபெற்றது.

இந்த நிலையில் ஜூன் மாதம் தனக்கு இரட்டை குழந்தைகள் பிறந்திருப்பதாக அறிவித்து அவர்களின் கையை பற்றி இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து இருந்தார். மேலும் இவர் கர்ப்பமாக இருக்கும் போது எந்த புகைப்படமும் வெளியாகாததால் இவர் வாடகை தாய் மூலமாக குழந்தை பெற்றுக் கொண்டதாக பலரும் விமர்சித்தனர். ஆனால் தான் உண்மையிலேயே கர்ப்பமாக இருந்ததாக பலமுறை விளக்கம் அளித்து இருந்தார் சின்மயி. இந்த நிலையில் இன்று இன்ஸ்டாகிராமில் தான் கர்ப்பமாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட ஒரே ஒரு புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, 32 வாரங்களில் நான் எடுத்த ஒரே செல்ஃபி என்று பதிவிட்டு இருக்கிறார்.மேலும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டேன் என்று சொன்னீர்களே அதற்காகத்தான் இதை ஷேர் செய்தேன் என்று பதிவிட்டு இருக்கிறார்.


மேலும் குழந்தைகளுக்கு ட்ரிப்தா சர்வாஷ் என்று பெயர் வைத்துள்ளார்.பின்னர் குழந்தைகளுக்கு பால் கொடுப்பது போன்ற ஒரு புகைப்படத்தையும் அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து இருக்கிறார். இதன் மூலமாக வாடகைத்தாய் பிரச்சனையை முடித்து வைத்திருக்கிறார்.