நடிகர் விஜய் நடிப்பபில் சமீபத்தில் வெளியான வாரிசு படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்போது அந்தப் படத்தின் சக்சஸ் மீட் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்து முடிந்த சக்சஸ் மீட்டை தொடர்ந்து, தற்போது சென்னையிலும் இந்த பார்ட்டியை படக்குழுவினருடன் சேர்ந்து விஜய் கொண்டாடியிருக்கிறார். தளபதி விஜயின் 66-வது படமாக தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் வெளியாகி இருந்த படம் தான் வாரிசு. இந்த படம் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த ஜனவரி 11ஆம் தேதி உலகம் எங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.

இந்த படத்தை வெங்கடேஸ்வரா க்ரியேஷன்ஸ் சார்பில் தில் ராஜு தயாரிக்க ஷியாம், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரபு, யோகி பாபு என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தார்கள். நீண்ட இடைவெளிக்கு பின்னர் குடும்ப உறவுகளை மையமாக வைத்திருந்த கதை அம்சத்தில் நடிகர் விஜய் நடித்திருந்தார். ஃபேமிலி ஆடியன்ஸை கவரும் விதமாக இந்த படம் இருந்தது. குடும்பங்கள் கொண்டாடும் வெற்றியாக வாரிசு திரைப்படம் 13 நாட்களைத் தாண்டியும் வசூலை வாரி குவித்து வருகிறது.

ஃபேமிலி ஆடியன்ஸை வெகுவாக கவர்ந்துள்ள வாரிசு திரைப்படம், இரண்டு வாரங்களைக் கடந்தும் வெற்றி நடை போட்டு வருகிறது. மேலும் பதினோராவது நாள் முடிவில் இந்த படம் சுமார் 250 கோடிக்கு மேல் வசூலை பெற்றிருப்பதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கும் மேல் அதிகமாக வசூலித்து வாரிசுப் படம் 100 கோடி கிளப்பில் இணைந்திருந்தது. இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் சென்னை ஈசிஆர் இல் உள்ள தனியார் ரிசார்ட்டில் படக்குழுவினருக்கு சிறப்பு விருந்து ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார் விஜய்.

அது மட்டுமில்லாமல் ஹைதராபாத்திற்கு படக்குழுவினருடன் சென்ற தளபதி அங்கு கேக் வெட்டி வம்சி மற்றும் தயாரிப்பாளர் தில் ராஜுடன் படத்தின் வெற்றியை கொண்டாடி இருந்தார். மேலும் படத்தின் இயக்குனரான வம்சியின் குடும்பத்தினருடன் செல்பி எடுத்தும் உற்சாகமாக இருந்தார் விஜய். அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது.

வாரிசு படம் கொடுத்த வெற்றியால் ஏகத்துக்கும் உற்சாகத்தில் இருக்கும் தளபதி தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது அடுத்த படமான 67வது படத்தின் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இந்த படத்தில் கேங்ஸ்டர் கெட்டப் என்று பலரும் கூறி வரும் நிலையில் தற்போது அதே கெட்டப்பில் வந்து சென்னையில் சக்சஸ் பார்ட்டியில் கலந்து கொண்டிருக்கிறார் தளபதி.

இந்த சக்சஸ் மீட்டிங்கில் நடிகைகள் ராஷ்மிகா மந்தனா, ராதிகா சரத்குமார், சம்யுக்தா, சங்கீதா, நடிகர்கள் ஷியாம், பிரபு, சரத்குமார், ஸ்ரீகாந்த், பாடல் ஆசிரியர் விவேக் தயாரிப்பாளர் தில் ராஜு, வம்சி, இசையமைப்பாளர் தமன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படங்களுக்கு லட்டுகளும் குவிந்து வருகிறது.! விரைவில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் தளபதி 67 படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.!