நடிகர் விஜய் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை அழைத்து அவர்களுக்கு பொன்னாடை போர்த்தியும் பரிசுகளை வழங்கியும் கவுரவப் படுத்தி இருந்தார். அந்த செய்தி கடந்த இரண்டு நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்து இருந்த நிலையில், தற்போது அஜித் ரசிகர்களும் அது போல சில புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத இரு துருவங்களாக இருப்பவர்கள் நடிகர் அஜித் மற்றும் விஜய் ஆவார். இவர்கள் இருவரின் ரசிகர்கள் எப்பொழுதும் தங்களின் தலைவர்களுக்காக மிகுந்த மெனக்கிடல்களை செய்வது உண்டு. இவர்கள் இருவரின் படங்கள் வெளியாகும் தினங்கள் எல்லாம் தமிழகமே அமர்க்களப்படும் அளவிற்கு இருவரின் ரசிகர்களும் தியேட்டர்களை திருவிழா போல மாற்றி விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

இந்த நிலையில் சமீபத்தில் விஜய் மற்றும் அஜித் ஆகிய இருவரின் திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாகி இருந்தது. வாரிசு மற்றும் துணிவு ஆகிய இரு படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருவரின் ரசிகர்களுக்கும் உற்சாகத்தை கொடுத்திருந்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இவர்வரின் படங்களும் நேரடியாக மோதியிருந்ததால் ரசிகர்களும் உற்சாகத்தில் திளைத்திருந்தனர்.

தற்போது விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தனது 67-வது படமான லியோ படத்தில் நடித்து வருகிறார். அஜித் குமார் தனது 62 ஆவது படமான விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆரம்பத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க இருந்த நிலையில், அவர் மாற்றப்பட்டு தற்போது மகிழ்ந்திருமேனி இந்த படத்தை இயக்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை லைக்கா ப்ரொடக்ஷன் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது சமீபத்தில் இந்த படத்தின் பெயர் விடாமுயற்சி என்று அறிவிக்கப்பட்டது. அதன் பின்னர் படம் குறித்த எந்த ஒரு அப்டேட்டுகளும் வெளியாகாமல் இருந்து வருகிறது. இதற்கிடையில் சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜய் தமிழக முழுவதும் மாவட்ட வாரியாக 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த நிகழ்ச்சியில் 600க்கு 600 மதிப்பெண் எடுத்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லஸ் ஒன்றையும் பரிசாக வழங்கினார். மேலும் 13 மணி நேரம் நின்று கொண்டே அனைத்து மாணவர்களுக்கும் பொன்னாடை போர்த்தியும் பரிசுகளை வழங்கியும் அனைவரையும் கௌரவித்திருந்தார்.

மேலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்த மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மதிய உணவு ஏற்பாடு செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கி இருந்தார். விஜயின் இந்த செயலை பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது அஜித் ரசிகர்கள் சில புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

விஜய் இன்று செய்திருக்கும் இந்த சுயலை அஜித் பல ஆண்டுகளுக்கு முன்பே செய்து விட்டதாக கூறி அவர்கள் புகைப்படங்களை இணையத்தில் பரப்பி வருகின்றனர். அதில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு அஜித் பரிசு வழங்கி இருப்பது போன்ற புகைப்படங்களும் அவர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களும் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது