விஜய் மக்கள் இயக்க தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் தற்போது விஜயின் தந்தை எஸ் ஏ சந்திரசேகரை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். இதனால் விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. விஜய் நேற்று தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டதை முன்னிட்டு அமெரிக்காவிலிருந்து திரும்பிய கையோடு மருத்துவமனைக்கு சென்றிருந்தார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியிருந்த நிலையில் நேற்று எஸ் ஏ சந்திரசேகர் அந்த புகைப்படத்தை பகிர்ந்து “மகனின் அன்பு தான் மனிதனுக்கு மாமருந்து” என்று பதிவிட்டு இருந்தார். இந்த நிலையில் இன்று விஜய் மக்கள் இயக்கத்தின் தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் எஸ்.ஏ சந்திரசேகரை நேரில் சந்தித்துள்ளார்.

விஜய்க்கும் அவரது தந்தைக்கும் பல ஆண்டுகளாக விஜய் மக்கள் இயக்கம் தொடர்பான பிரச்சனை இருந்து வருகிறது. விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றுவதில் இருவருக்கும் பிரச்சனை எழுந்ததாக கூறப்பட்டது. அதன் பின்னர் சந்திரசேகருக்கும் விஜயும் ஒருமுறை கூட நேரில் சந்தித்துக் கொள்ளவே இல்லை. தனது தாயை மட்டும் அவ்வப்போது விஜய் சந்தித்து வந்தார்.

எஸ் ஏ சந்திரசேகரின் 80வது பிறந்தநாள் விழாவிலும் விஜய் கலந்து கொள்ளவில்லை. அதேபோல திருக்கடையூரில் நடைபெற்ற 80-வது திருமண விழாவிலும் விஜய் கலந்து கொள்ள வில்லை. இதனால் குடும்பப் பிரச்சனை வீதிக்கு வரத் தொடங்கியது. இந்த நிலையில் நேற்று விஜய் தனது தந்தையை சந்தித்து அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்திருந்தார்.

தந்தைக்கும் மகனுக்கும் இத்தனை ஆண்டுகளாக நிலவி வந்த பிரச்சனை முடிவுக்கு வந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அதன் தலைவராக இருக்கும் புஸ்ஸி ஆனந்த் இன்று சந்திரசேகரை நேரில் சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படங்களை பதிவிட்ட சந்திரசேகர், “பிள்ளைகள் ஒன்று சேரும்போது பெற்றோருக்கு மட்டுமல்ல, மொத்த குடும்பத்திற்காக வலிமை கூடுகிறது” என்று பதிவிட்டு இருக்கிறார். இதன் மூலமாக இத்தனை நாட்கள் நிலவி வந்த குடும்ப பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளதாக தெரிகிறது. இனி விஜய் மக்கள் இயக்கம் முழு வீச்சில் இயங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.