
அமெரிக்காவின் நிவாடா மாகாணம் லாஸ் வேகாஸ் நகரத்தில் சில புறாக்கள் தொப்பிகளுடன் பறப்பதைக் கண்டு மக்கள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.
லாஸ் வேகாஸ் நகரத்தில் சில புறாக்கள் வித்தியாசமான தோற்றத்தில் காணப்பட்டது. அதனை ஆர்வத்துடன் அறிந்து கொள்ள மக்கள் புறாக்களின் அருகில் சென்று பார்த்தனர். அப்போது புறாக்களின் தலையில் சிறிய தொப்பிகள் காணப்பட்டன. இதனை ஆழ்ந்த வியப்புடன் கண்ட மக்கள் அவற்றை புகைப்படம் மற்றும் வீடியோக்கள் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். அது இணையதளத்தில் வைரல் ஆனது. இருப்பினும் விலங்குகள் நல ஆர்வலர்கள் அந்த தொப்பிகள் புறாக்களைத் துன்பப்படுத்தும் என்று கவலையுடன் தெரிவித்திருந்தனர்.
இதனைப் பற்றி புறாக்களை மீட்டு பராமரிக்கும் தன்னார்வ அமைப்பை சேர்ந்த ஆர்வலர் ஒருவர் கூறியதாவது
“புறாக்களின் தலையில் எவ்வாறு தொப்பிகள் பொருத்தப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் பசையை வைத்து தொப்பிகள் புறாக்களின் தலையில் பொருத்தப்பட்டிருந்தால் அது புறாக்களுக்கு மேலும் துன்பத்தை ஏற்படுத்தும். இதனை யார் செய்தது என்று விசாரித்து வருகிறோம். மக்கள் தொப்பியுடன் புறாக்களை எங்காவது கண்டால் எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.”