
கடந்த சில மாதங்களாக வெப் தொடர்கள் தயாரிப்பதில் சினிமா துறை ஆர்வம் காட்டி வருகின்றது. இந்த நிலையில் 15 மேற்பட்ட வெப் சீரிஸ் தயாராகி வருகின்றன. இந்த வரிசையில் ‘மீட் மிஸ்டர் திருவள்ளுவர்’ என்ற பெயரில் புதிய வெப் தொடர் உருவாகிறது.
இந்த தொடரில் திருவள்ளுவராக பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். யூடியூபில் பிரபலமாகி வரும் பிளாக் ஷீப் என்ற செனல் தயாரிக்கும் இந்த தொடரை டூட் விக்கி இயக்குகிறார். இதில் ஆர்.ஜே. விக்னேஷ், சுட்டி அரவிந்த் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் வருகிறார்கள். ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப துறைகளில் பணியாற்றும் தற்போதைய இளைய தலைமுறையினருக்கு ஏற்படும் பிரச்சினைகளையும் அதற்கான தீர்வுகளையும் ஹர்பஜன் சிங் திருக்குறள் வாயிலாக சொல்வதுபோன்று இந்த தொடரின் கதையை உருவாக்கி வருகின்றனர்.
12 தொடர்களை கொண்ட இதன் முதல் சீசன் தொடர் பிப்ரவரி 2-ந்தேதி இணையதளத்தில் வெளியாக உள்ளது. இதுபோல் சேதுராமன் நடிப்பில் ஆண் பாவம் என்ற தொடரையும் தயாரிக்கிறது. கார்த்திக் வேணுகோபால் இயக்குகிறார். சென்னையில் நடந்த இந்த தொடரின் அறிமுக நிகழ்ச்சியில் டைரக்டர்கள் சேரன், விஜய் சந்தர், தயாரிப்பாளர் எஸ்.தாணு, நாஞ்சில் சம்பத், நடிகர் ரியோ, சேதுராமன், அசார் உள்ளிட்டோர் பங்கேற்றிருந்தனர்.
அதுமட்டுமல்லாது பிளாக் ஷீப் நிறுவனம் பிளாக் ஷீப் அயாசும் மைக் செட் ஸ்ரீராமும் கதாநாயகர்களாக நடிக்க ராக்போர்ட் என்டர்டெயின்மென்ட் முருகானந்தத்துடன் இணைந்து புதிய படம் ஒன்றையும் தயாரிக்க உள்ளது.