
சமீபத்தில் வடிவேலு இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க அவர் மறுத்ததன் காரணமாக, இயக்குநர் ஷங்கர் புகார் செய்ததால் வடிவேலுவுக்கு புதிய படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதற்கு தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது. எனவே வடிவேலு கடந்த சில வருடங்களாக படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர். சில வாரங்களுக்கு முன்பு கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் வடிவேல் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது.
இருந்தபோதிலும், கமல் தற்போது அரசியல் பணிகள், இந்தியன்-2 பட வேலைகள் போன்றவற்றில் பிசியாக இருக்கிறார். எனவே தலைவன் இருக்கின்றான் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்த நிலையில் ‘வெப்’ தொடர்களில் நடிக்க வடிவேலுக்கு அழைப்புகள் வருகின்றன. அதை ஏற்று ‘வெப்’ தொடருக்கு மாற வடிவேல் தயாராகி வருவதாக தகவல் வெளியாகி இருந்தது.
ஏற்கனவே முன்னணி நடிகர் நடிகைகள் பலர் வெப் தொடர்களில் நடிக்க வந்துள்ளனர். ரம்யாகிருஷ்ணன், சோனியா அகர்வால் நடித்த குயின் வெப் தொடர் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. பரத், பாபி சிம்ஹா, பிரசன்னா, மீனா, காஜல் அகர்வால், தமன்னா, சமந்தா, நித்யாமேனன், பிரியாமணி, பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோரும் வெப் தொடர்களில் நடிக்கின்றனர்.