
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்த விவகாரத்தில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி முதல்வரிடம் தனிப்படை போலீசாரால் விசாரணை நடத்தப்பட்டது.
தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் உதித் சூர்யா என்ற மாணவர், இந்தாண்டு நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தி வந்த கல்லூரி முதல்வர் ராஜேந்திரன், மருத்துவக்கவுன்சிலிலும் காவல்நிலையத்திலும் புகார் அளித்திருந்தார்.
கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் கொடுத்துள்ள புகாரின் அடிப்படையில், தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், மருத்துவக்கவுன்சிலின் உத்தரவுப்படி, மாநிலம் முழுவதிலும் உள்ள மருத்துவக்கல்லூரிகளில் முதலாமாண்டு சேர்ந்த மாணவர்களின் விபரங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது.
குறிப்பாக மாணவர்கள் கல்லூரியில் சேர்ந்ததும் விடுப்பில் வெளியூர் எங்கேயேனும் சென்றுள்ளார்களா? மாணவர்களுடைய கல்விச்சான்றிதழ்கள், நீட் தேர்வு எழுதியபோது உபயோகித்த நுழைவுச்சீட்டு, கல்லூரியில் சேர்க்கை நடைபெறும் போது பணியாற்றிய ஆசிரியர்கள் யார் யார் என பல்வேறு விவரங்களை ஆராய்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரனிடமும் காவல் ஆய்வாளர் உஷா இன்று விசாரணை நடத்தி இருந்தார். கல்லூரியில் முதலாமண்டு இணையும் போது மாணவர்கள் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுப்பார்கள். அவ்வாறு எடுக்கும் போது அதில் உதித் சூர்யா இருந்தாரா? உதித் சூர்யாவை கல்லூரியில் சேர்க்கும் போது அவர் பெற்றோருடன் வந்திருக்கும் சிசிடிவி காட்சிகள் ஏதேனும் இருக்கிறதா? ஆள்மாறாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது 13ம் தேதி, ஆனால், காவல்நிலையத்துக்கு புகார் அளித்தது 18ம் தேதி. இந்த புகாரை ஏன் 13ம் தேதியே அளிக்கவில்லை இது போன்ற கேள்விகள் விசாரணையில் கேட்கப்பட்டிருக்கலாம் எனவும் தெரிகிறது.