
இயக்குனர் வசந்தபாலன் தமிழ் வெயில், அங்காடி தெரு, அரவான், காவியத்தலைவன் ஆகிய வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவர் தற்போது ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக கொண்டு ஜெயில் என்ற படத்தை இயக்கி வருகிறார். கிரிகிஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்த இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த வருடமே முடிந்து விட்டது.
படபிடிப்பு முடிந்த பிறகு சிறப்பாக வந்துள்ளது என்றும், தமிழ் திரையுலகில் இதுவரை எடுக்கப்படாத கதை என்றும் பாரட்டி உள்ளனர். படத்தில் ஜி.வி.பிரகாசின் பின்னணி இசையும் பேசப்படும் என்று பேசப்பட்டது. இருந்தாலும் படப்பிடிப்பு முடிந்து பல மாதங்கள் கடந்த நிலையில் திரைக்கு வராதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
சென்ற வருடமே படம் வெளியாகும் என்று எதிர்பார்த்தும் வெளியாகவில்லை. சில சிக்கல்கள் ஏற்பட்ட நிலையில் படம் திட்டமிட்டபடி திரைக்கு வராமல் ரிலீஸ் தள்ளிப்போவதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து வசந்தபாலன் தனது முகநூல் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில் “ஒரு தயாரிப்பாளரை பிடிக்கிறதுக்கு தலைகீழா நிக்கணும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கணும். படப்பிடிப்பு பிரச்சனை இல்லமால் நடக்க கையில் அக்னிசட்டி ஏந்தி கயிற்றில் நடக்கணும் என்றும் இதை கூட தாங்கிடலாம். ஆனால் எடுத்த படத்தை ரிலீஸ் பண்ணத்தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த பதிவினால் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ஜெயில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான ஏற்பாடுகள் தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.