தமிழில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்துக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய். இவர் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து 63 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ரக காருக்கு நுழைவுவரி செலுத்தாத வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் 2019 ஆம் ஆண்டு ஜனவரிக்கு பின்னர் முழு நுழைவு வரி செலுத்தி இருக்காவிட்டால் நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று வணிகவரித்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் கடந்த 2005 ஆம் ஆண்டு அமெரிக்காவிலிருந்து 63 லட்சம் மதிப்புள்ள ஒரு பிஎம்டபிள்யூ காரை இறக்குமதி செய்திருந்தார். இந்த காருக்கு நுழைவு வரி செலுத்துமாறு தமிழக வணிகவரித்துறை உத்தரவிட்டிருந்தது. இதை எதிர்த்து விஜய் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் நுழைவு வரிகளை வசூலிப்பதற்கு மாநிலங்களுக்கு உரிய அதிகாரம் இருக்கிறது என்றும், நுழைவு வரியை செலுத்த வேண்டும் என்றும் நடிகர் விஜய்க்கு உத்தரவு பிறப்பித்தது. இதனால் வேறு வழியில்லாமல் 7,98,075 ரூபாய் நுழைவு வரியாக செலுத்தினார் விஜய். இந்த நிலையில் வரி செலுத்தாத இடைப்பட்ட காலத்திற்கான அபராத தொகையாக 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாய் தொகையை விஜய் உடனே செலுத்த வேண்டும் என்று டிசம்பர் 17 2021 வணிகவரித்துறை உத்தரவிட்டு இருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தை நாடினால் நடிகர் விஜய். இந்த வழக்கில் ஆஜரான விஜய் தரப்பு வழக்கறிஞர் 2005 ஆம் ஆண்டு இறக்குமதி செய்யப்பட்ட காருக்கு 2021 ஆம் ஆண்டு தான் நோட்டீஸ் அளித்ததால் அந்த நோட்டீசை ரத்து செய்ய வேண்டும் என்று விவாதித்தார். மேலும் கார் இறக்குமதி செய்யப்பட்ட தினத்தில் இருந்து மாதத்திற்கு இரண்டு சதவீதம் என்று கணக்கிட்டு அபராதம் வசூலிக்க வேண்டுமே தவிர தற்போது தனக்கு 400% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த வணிகவரித்துறை நுழைவு வரியை 2019-ல் செலுத்த வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்னரும் குறித்த காலத்தில் நுழைவு வரி செலுத்தவில்லை. 2005 டிசம்பர் முதல் 2021 செப்டம்பர் வரை 189 மாதங்களுக்கு நுழைவு வரியில் 2% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அபராத தொகை 30 லட்சத்து 23 ஆயிரத்து 609 ரூபாயை செலுத்தும் படி உத்தரவிட்டதாகவும், சட்டத்தில் அதற்கு இடம் உள்ளதாகவும் வணிகவரித்துறை தெரிவித்தது. காரை வேறொரு நபருக்கு விட்டு விட்டதாக விஜய் கூறினாலும் இறக்குமதி செய்யப்பட்ட அவர் காருக்கு நுழைவு வரி செலுத்த வேண்டும் எனவும் வாதிடப்பட்டது. அனைத்து வாதங்களையும் கேட்ட நீதிபதி ஜனவரி 2019க்குள் விஜய் நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபராத தொகையான 30,23,609₹ யை வசூலிக்க கூடாது என்றும் அப்படி அவர் ஜனவரி 2019க்கு பிறகு நுழைவு வரியை செலுத்தியிருந்தால் அபரதாம் விதிக்கலாம் என்று தீர்பளித்து வழக்கை முடித்து வைத்தார்.
Youtube Video Code Embed Credits: Indiaglitz