சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் ‘கில்லி’ பட நடிகை ஒருவர் களமிறங்க இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவல்கள் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை. இருப்பினும் ஜனனிக்கு ஆதரவான கதாபாத்திரத்தில் இந்த புதிய கதாபாத்திரம் களமிறங்க இருப்பதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. சன் டிவியின் முக்கிய தொடர்களில் ஒன்றாக இருந்து வருகிறது ‘எதிர்நீச்சல்’ சீரியல். ஆதி குணசேகரனாக நடித்து வந்த மாரிமுத்துவின் மறைவுக்கு பின்னர் இந்த சீரியலில் பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டது. தற்போது தொடர்ந்து பல்வேறு மாற்றங்கள் இந்த சீரியலில் செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க முடியாமல் திணறி வருகிறது ‘எதிர்நீச்சல்’.

இந்த சீரியலில் மாரிமுத்து மறைவுக்கு பின்னர் ஆதி குணசேகரனாக வேலராமமூர்த்தி நடித்து வருகிறார். இவர் மாரிமுத்து போல அல்லாமல் வெறும் வில்லத்தனங்களை மட்டுமே வெளிப்படுத்தி வருவதால் ரசிகர்கள் பலருக்கும் இந்த சீரியலை பார்க்க விருப்பமில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் கிருஷ்ணசாமி மெய்யப்பன், ராமசாமி மெய்யப்பன் போன்ற புதுப்புது வில்லன்களை இயக்குனர் களமிறக்கி இருக்கிறார். அந்த வகையில் ஜனனிக்கு ஆதரவான கதாபாத்திரமாக தற்போது ‘கில்லி’ படத்தில் நடித்த நடிகை ஒருவரை களமிறக்க இருப்பதாக தெரிகிறது. குணசேகரனின் அப்பத்தா கதையை எதிர்பாராத விதமாக முடித்திருந்த நிலையில், ஜனனிக்கு அப்பத்தாவாக புது எண்ட்ரியாக நடிகை டி.கே.கலா களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
நடிகை டி.கே கலா ‘கில்லி’ படத்தில் விஜய்க்கு தாயார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர். மேலும் ‘பிரிவோம் சந்திப்போம்’, ‘மாசிலாமணி’, ‘காடு’, ‘குருவி’ உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். பல படங்களில் பின்னணி பாடகராகவும் இவர் வலம் வந்திருக்கிறார். குறிப்பாக ‘அகத்தியர்’ படத்தில் இவர் பாடிய “தாயிற் சிறந்த கோவிலும் இல்லை..” பாடல் மிகப் பிரபலமானது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் தற்போது இவர் ஜனனியின் அப்பத்தா கதாபாத்திரத்தில் ‘எதிர்நீச்சல்’ சீரியலில் என்ட்ரியாக இருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் ஜான்சி ராணி கரிகாலன் போன்றவர்களுக்கு சரியான பதிலடி கொடுக்கும் கதாபாத்திரமாக இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.