நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியும் பிரபுவின் மகளுமான ஐஸ்வர்யாவுக்கு இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் உடன் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்த திருமணத்திற்கு திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரபலங்கள் பலரும் நேரில் வந்து வாழ்த்தி இருக்கின்றனர்.

தமிழ் திரையுலகில் கலைக் குடும்பமாக விளங்கிக் கொண்டிருப்பவர்கள்தான் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர்.

சிவாஜி கணேசன், பிரபு, விக்ரம் பிரபு என்று இவர்களின் கலைப்பயணம் மூன்று தலைமுறைகளாக திரைத் துறையில் தொடர்ந்து வருகிறது.

மக்களின் மனம் கவர்ந்த குடும்பமாக இருக்கும் சிவாஜி கணேசனின் குடும்பத்தில் இன்று திருமண விழா களைகட்டி இருக்கிறது.

பிரபுவின் மகளுக்கும் ‘மார்க் ஆண்டனி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் சென்னையில் இன்று கோலாகலமாக திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இயக்குனர் பிரபுவின் மகளுக்கு ஏற்கனவே 2009ம் ஆண்டு குணால் என்பவருடன் திருமணம் நடந்து இருந்தது. தனது அத்தை மகன் குணாலையே திருமணம் செய்து கொண்டிருந்தார் ஐஸ்வர்யா. ஆனால் சில தனிப்பட்ட காரணங்களுக்காக குணால் – ஐஸ்வர்யா தம்பதி பிரிய நேர்ந்தது.

சிவாஜி கணேசன் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து பிரச்சனைகள் காரணமாக இந்த தம்பதிகள் உறவில் விரிசல் ஏற்படவே இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர். பின்னர் ஐஸ்வர்யா ‘மெல்ட்ஸ் டெஸர்ட்’ என்கிற பெயரில் கேக் தயாரிக்கும் நிறுவனத்தை தொடங்கியிருந்தார்.

இந்த நிலையில் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கும் ஐஸ்வர்யாவுக்கும் திருமணம் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியானது. இந்த தகவலை இரண்டு தரப்பினருமே உறுதி செய்யாமல் மௌனம் காத்து வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் இருவருக்கும் இன்று சென்னையில் வைத்து திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.

இதில் நடிகர் விஷால், குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ், சுஹாசினி, துல்கர் சல்மான் போன்ற பல திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டு தம்பதிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.!