வெகு நேரமாக மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்த ஆயிஷா மற்றும் ஷெரீனாவை பிக்பாஸ் தமிழில் பேசுமாறு கூறியிருக்கும் வீடியோ தற்போது வைரலாகி இருக்கிறது. இதற்கு சில மலையாளிகளும் கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர். பிக்பாஸ் சீசன் 6 தொடங்கி தற்போது 13 நாட்களை கடந்து விட்டது. மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கும் இந்த சீசனில் 21 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் முதல் வார எலிமினேஷனாக நடன இயக்குனர் சாந்தி வெளியேற்றப்பட்டுள்ளார். மேலும் ஜி.பி.முத்து தனக்கு மிகுந்த மன அழுத்தம் இருப்பதாகவும், பிள்ளைகளை தேடுவதாகவும் கூறி வீட்டை விட்டு வெளியேறி விட்டார். தற்போது 19 போட்டியாளர்களுடன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது பிக்பாஸ் சீசன் 6. மேலும் சில போட்டியாளர்களை உள்ளே அனுப்பவும் பிக்பாஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
தற்போது பிக்பாஸில் நீயும் பொம்மை நானும் பொம்மை டாஸ்க் வைக்கப்பட்டுள்ளது. இது கடந்த சீசனை நினைவுபடுத்துவதாக உள்ளது. கடந்த சீசனில் இந்த போட்டியின் போது மிகப்பெரிய சண்டை வந்தது. அதேபோல் தற்போதும் இந்த போட்டியில் சண்டை வருவது போன்ற ப்ரோமோக்களே பிக்பாஸ் வெளியிட்டு இருக்கிறது. தொடர்ந்து வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறி வருவது வாடிக்கையாக இருக்கிறது. ஒருமையில் பேசுவது, வாடி போடி என்று பேசுவது, மைக்கை போடாமல் பேசுவது என்று முன்பு இருந்த சீசன்களை போல் அல்லாமல் போட்டியாளர்கள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதை பிக்ஸும் அவ்வப்போது கண்டித்து வந்தாலும், போட்டியாளர்கள் இதை பின்பற்றுவதாக தெரியவில்லை.
கதிரவனும், குயின்சியும் ஒரு படி மேலே போய் குறியீடுகள் மூலமாகவும், கைகளில் எழுதி காட்டியும் பேச தொடங்கினர். இதை கமலஹாசனே கண்டித்தார். தற்போது ஆயிஷா மற்றும் ஷெரீனா இருவரும் வெகுநேரமாக மலையாளத்தில் பேசிக் கொண்டிருந்தனர். இதை அவர்கள் நிறுத்துவதாகவே தெரியவில்லை. இதனால் கடுப்பான பிக்பாஸ் ஆயிஷா ஷெரீனா மலையாளத்தில் அல்ல, தமிழில் சம்சாரிக்கணும் என்று கிண்டலாக கூறினார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தமிழ் பிக்பாஸுக்கு வந்துவிட்டு இப்படி மலையாளத்தில் பேசுவது தமிழ் ஆடியன்சை அவமானப்படுத்தும் விதமாக இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் மலையாள ரசிகர்களும் நாங்கள் இதை ஆதரிக்கவில்லை, தமிழ் ரசிகர்களுக்காக தமிழில் பேசவும் என்றும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
