ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் காங்கிரஸ் கட்சியின் சிந்தனை அமர்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், 2024-ம் ஆண்டு நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வியூகம் அமைக்கவும், அதிருப்தியில் இருக்கும் முக்கியத் தலைவர்களைச் சமாதானப்படுத்தவும், எதிர்வரும் சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளவும், நிர்வாக ரீதியாக புதிய முடிவெடுக்கவும் நிர்வாகிகளுடன் கட்சி மேலிடம் ஆலோசனை மேற்கொண்டுவருகிறது.
இந்த ஆலோசனையில் காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் பாதயாத்திரை, பொதுக்கூட்டங்கள் நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. வேலையில்லாத் திண்டாட்டத்தை முன்னிறுத்தி காங்கிரஸ் நாடு தழுவிய பாதயாத்திரை மேற்கொள்ளும். இந்த திட்டம் ‘ஜன் ஜாக்ரன் அபியான் 2.0’-ன் ஒரு பகுதியாகும். இதுதொடர்பான ஆலோசனையை திக்விஜய் சிங் வழங்கினார்.

இந்த திட்டம் குறித்து மிக நீண்ட விவாதம் நடைபெற்றது. மேலும், நாடு முழுவதும் உள்ள மக்களுடன் இணைவதற்கான ஆலோசனையாக இளைஞர் குழு இதேபோன்ற திட்டத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்த திட்டத்தின் சாரம்சம், வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்பாகக் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை காங்கிரஸ் பாதயாத்திரை நடத்த வேண்டும் என்றும் ராகுல் காந்தி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் அவ்வப்போது அந்த நிகழ்வுகளில் பங்கேற்பார்கள் என்றும் திட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.
இதுதொடர்பாக தனியார் நிறுவனத்திடம் பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், ”இந்தத் திட்டம் கிட்டத்தட்ட இறுதியானது. நாடு முழுவதும் இந்த யாத்திரையைக் காங்கிரஸ் நடத்த உள்ளது. பொதுக்கூட்டங்கள் நடத்தவும் முன்மொழியப்பட்டுள்ளது. மக்களுடன் நேரடியாக இணைவதற்கான நடவடிக்கையாகக் காங்கிரஸ் இதைக் கருதுகிறது” எனக் கூறினார்.