Categories: சினிமா

தாயுமானவனாக மாறிய கவின்.! எப்படி இருக்கிறது “டாடா” படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.!

வெளியிட்டது

இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் கவின் மற்றும் அபர்ணாதாஸ் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் திரைப்படம் தான் டாடா. இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனத்தை தற்போது பார்க்கலாம். தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் சொல்லாத கதையை எடுத்து, அதை படமாக்குவதை இன்றைய காலத்து இயக்குனர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். டாடா திரைப்படமும் அப்படி ஒரு சொல்லப்படாத ஒரு கதைதான். படத்தின் மையக்கரு வித்தியாசமாக இருக்கும்போதிலும் அதை ரசிக்கும் படியாகவும் பார்ப்பவர்களுக்கு மிகுந்த சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனராக இருக்கும் கணேஷ் பாபு. தற்போது இந்த படம் குறித்த முழு விமர்சனத்தைப் பார்க்கலாம். கவின் மணிகண்டன் என்கிற கதாபாத்திரத்திலும், அபர்ணாதாஸ் சிந்து என்கிற கதாபாத்திரத்திலும் அறிமுகமாகிறார்கள். இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் இருவருக்குள்ளும் காதல் மலர்கிறது. காதலின் நெருக்கம் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் அபர்ணா கர்ப்பம் ஆகிறார். ஆனால் இந்த கர்ப்பத்தை கவின் கலைத்து விடச் சொல்கிறார். ஆனால் அபர்ணா அதை மறுத்து குழந்தை பெற்றே தீருவேன் என்று கூறுகிறார்.

தாயுமானவனாக மாறிய கவின்.! எப்படி இருக்கிறது "டாடா" படம்.! முழு திரைவிமர்சனம் இதோ.! 1
இந்த விஷயம் ஒரு கட்டத்தில் இருவரின் குடும்ப வீட்டிற்கும் தெரிய வர பெற்றோர்களின் கோபத்திற்கு ஆளாகிறார்கள். இருவரின் குடும்பமும் இவர்களை ஒதுக்கி வைத்து விடுகிறார்கள். இதனால் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கு இருவரும் வசித்து வருகிறார்கள். அப்போது இருவருக்கும் சண்டை வருகிறது.்ஒரு நாள் சண்டை முற்றிப் போகவே கோபத்தில் கர்ப்பிணியாக இருக்கும் அபர்ணாவை தனியாக விட்டு விட்டு ஆபீஸ்க்கு செல்கிறார் கவின். அங்கு அபர்ணாவிற்கு பிரசவ வலி எடுக்க கவினுக்கு போன் செய்து கொண்டே இருக்கிறார் ஆனால் அவர் போனை சுவிட்ச் ஆப் செய்து விடுகிறார். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அபர்ணா குழந்தை பெறுகிறார். இரவு லேட் ஆக வீட்டிற்கு திரும்பும் கவினுக்கு அபர்ணாவுக்கு குழந்தை பிறந்த விஷயம் தெரிய வர, மருத்துவமனைக்கு ஓடுகிறார். ஆனால் அங்கு குழந்தை மட்டுமே இருக்கிறது. அபர்ணா இல்லை. குழந்தையை பார்க்காமல் அபர்ணாவை அவரது பெற்றோர்கள் அழைத்துச் சென்றது கவினுக்கு தெரிய வருகிறது. இனி ஜென்மத்திலும் அபர்ணாவை மன்னிக்க மாட்டேன் என்று சொல்லி குழந்தையை எடுத்துக்கொண்டு செல்கிறார் கவின்.

குழந்தையை தூக்கிக் கொண்டு செல்லும் கவின், ஆரம்பத்தில் ஆசிரமத்தில் விட்டு விடலாம் என்று சொல்லி அங்கு செல்கிறார். ஆனால் அது சரியான முடிவு அல்ல என்று எண்ணி தன்னுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்று பல கஷ்டங்களை சமாளித்து தன்னுடன் வளர்க்கிறார். சில வருடங்கள் சென்றதும் கவினின் மகன் ஆத்தியாவும் வளர்ந்து பள்ளிக்கு செல்கிறார். இந்த சமயத்தில் கவினுக்கு விடிவி கணேஷ் மூலமாக நல்ல வேலை கிடைக்கிறது. கவினுக்கு வேலை கிடைக்கும் அதே கம்பெனியில் தான் அவரது மனைவி அபர்ணாவும் வேலை பார்த்து வருகிறார். நீண்ட வருடங்களுக்கு பின்பு அபர்ணாவை பார்க்கும் கவின் என்ன செய்தார்? மகனை எதற்காக அபர்ணா மருத்துவமனையில் விட்டு சென்றார்? இருவரும் மீண்டும் இணைந்தார்களா? அந்த குழந்தையின் மீண்டும் தாயுடன் சேர்ந்ததா? என்பதுதான் படத்தின் மீதிக் கதை. படிக்கும் சமயத்தில் காதல் என்பதே பெரும்பாலான பெற்றோர்கள் எதிர்க்கும் நிலையில் இருவரும் குழந்தை வரை சென்ற நிலையில், ஆதரவில்லாமல் தவிக்கும் காட்சிகளில் கவின் மற்றும் அபர்ணா இருவரும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.


நண்பனின் உதவியை கொண்டு வாழ்க்கையை ஆரம்பிக்கும் அவர்கள் மெச்சூரிட்டி இல்லாத வயதில் குழந்தையுடன் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என அனைத்தையும் திறமையாக நடிப்பில் வெளி காட்டி இருக்கிறார்கள். இதில் உச்சபட்சமாக கவின் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பல இடங்களில் அவரது நடிப்பு கண்ணீரை வரவழைத்து இருக்கிறது. கவினுக்கு எந்த சூழ்நிலையிலும் உதவி செய்யும் நண்பனாக ஹரீஷும், வாழ்க்கையில் கஷ்டப்படும் பொழுது ஏதோ ஒரு வகையில் உதவி செய்யும் மனிதராக விடிவி கணேஷ் என படத்தில் வந்த அனைத்து கதாபாத்திரங்களும் குறிப்பிட்டுச் சொல்லத் தகுந்தவைகளாக இருக்கின்றன. கவின் அப்பா பாக்கியராஜ் மற்றும் ஐஸ்வர்யா ஆகியோர் சில இடங்களில் மட்டுமே தோன்றியிருந்தாலும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கவினுக்கு மகனாக நடித்த மாஸ்டர் இளனும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இசையமைப்பாளர் ஜென்மார்ட்டின் முதல் படத்திலேயே தனது அற்புதமான திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார். அப்பாவுக்கும் மகனுக்குமான உணர்வுகளை இசையால் அழகாக கடத்தியிருக்கிறார்.

முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை எடுத்துக்கொண்டு அதை வெற்றிகரமாக இயக்கி இருக்கும் கணேஷ் பாபுவின் திறமை பாராட்டுக்குரியது. அதேபோல எழிலரசனின் ஒளிப்பதிவு, தேவையான காட்சிகளை சரியாக தொகுத்து இருக்கும் கதிரஷ் அழகேசனின் படத்தொகுப்பு ஆகியவை பாராட்ட தகுந்தவையாக இருக்கின்றன. பெற்றோர்களின் சம்பந்தமில்லாமல் காதல் வரம்பு மீறி சென்று, குழந்தையாக மாறிய பின்பு அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் விஷயங்களை எதார்த்தத்துடன் எடுத்துக்காட்டி இருக்கிறது டாடா திரைப்படம் முதல் பாதி மெதுவாக சென்றபோதிலும் இரண்டாவது பாதியை வேகமாக நகருகிறது. மொத்தத்தில் டாடா தாயுமானவனாக மாறி வெற்றி பெற்று இருக்கிறார். இந்தப் படத்திற்கு தமிழ்கிளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.75/5

Youtube Video Embed Code Credits: Think Music India

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்