நடிகராக இருக்கும் நடிகர் தனுஷ் திடீரென சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்திருக்கிறார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், தற்போது அது குறித்த தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. தனுஷ் இயக்க இருக்கும் அடுத்த படத்தில் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்கிற தகவலை ராதிகா சரத்குமாரே தனது சமூக வலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.

நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முக திறமையாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் தனுஷ். இவர் தனது 50வது திரைப்படமான ‘D50’ திரைப்படத்தை அவரே இயக்கி முடித்திருக்கிறார். அதன் படப்பிடிப்புகள் சமீபத்தில் முடிவடைந்ததாக தனுஷே சமூக வலைத்தளத்தில் அறிவித்திருந்தார்.
‘D50’ படம் தனுஷ் இயக்கும் இரண்டாவது திரைப்படமாகும். இந்த படம் முடிவடைந்த உடனேயே அடுத்த படத்தை இயக்க தொடங்கியிருக்கிறார் தனுஷ். தனுஷ் இயக்கும் மூன்றாவது படத்தில் அவருடைய சகோதரியின் மகன் வருண் கதாநாயகனாக நடிக்க இருப்பதாகவும், தனுஷ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சரத்குமார் இணைந்துள்ள தகவலை அவரது மனைவி ராதிகா சரத்குமார் வெளியிட்டு இருக்கிறார். நேற்று நடைபெற்ற நடிகர் பிரபுவின் மகள் மற்றும் இயக்குனர் ஆதிக்க ரவிச்சந்திரன் திருமண விழாவிற்கு வருகை தந்த தனுஷ், ராதிகா மற்றும் சரத்குமாரின் குடும்பத்தை நேரில் சென்று சந்தித்திருக்கிறார்.
இந்த புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் ராதிகா சரத்குமார், “தனுஷின் அடுத்த படத்தில் சரத்குமார் இணைந்து இருப்பது தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது” என பதிவிட்டு இருக்கிறார். மேலும் ராதிகா, வரலட்சுமி, ராதிகாவின் மகள் ரயான் ஆகியோருடன் தனுஷ் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்களையும் ராதிகா பகிர்ந்து இருக்கிறார். தனுஷின் அடுத்த படத்தில் சரத்குமார் இணைந்து இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.