Categories: சினிமா

வாத்தி எடுத்த பாடம் எடுபட்டதா? முழு விமர்சனம் இதோ.! Tamilglitz வழங்கும் ரேட்டிங் – (?/5)

வெளியிட்டது

தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடிகர் தனுஷ், சம்யுக்தா சமுத்திரக்கனி, கென் கருணாஸ் ஆகிய பலரின் நடிப்பில் வெளியாகியிருக்கும் திரைப்படம் தான் வாத்தி ்இந்த திரைப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க, தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்திருந்தார். இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாகி இருந்தது. கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி இந்த படம் உருவாகியுள்ளது் கல்வியை வியாபாரமாக பார்த்து கோடிகளில் புரளும் கல்வி நிறுவன முதலாளிக்கும், எளியவர்களுக்கும் கல்வி சென்று சேர வேண்டும் என்று நினைக்கும் ஒரு வாத்தியாருக்கும் இடையிலே நடக்கும் போராட்டம் தான் இந்த திரைப்படம். கல்வியின் முக்கியத்துவம் எவ்வளவு? படித்தால் வாழ்க்கையில் எந்த அளவிற்கு உயர முடியும் என்கிற கருத்தை ஆணித்தரமாக கூறியிருக்கிறது இந்த படம். சாதி, மத வித்தியாசம் இல்லாமல் வாழ்க்கையின் தரத்தை உயர்த்த கல்வி மட்டுமே உதவும் என்பதை அழுத்தமாக சொல்லி இருக்கும் வாத்தி திரைப்படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு விமர்சனங்களை தற்போது பார்க்கலாம்.

வாத்தி எடுத்த பாடம் எடுபட்டதா? முழு விமர்சனம் இதோ.! Tamilglitz வழங்கும் ரேட்டிங் - (?/5) 1
90களில் தனியார் பள்ளிகள், அரசு பள்ளிகளை காட்டிலும் அதிக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அரசு பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு வருகிறது. நடிகர் தனுஷ் ஒரு தனியார் பள்ளியில் உதவி ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த பள்ளியை நடத்தி வருபவராக சமுத்திரக்கனி இருக்கிறார். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதற்காக தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கம் ஒரு முடிவு ஒன்றை எடுக்கிறது. அதில் தங்களிடம் உள்ள திறமையற்ற ஆசிரியர்களை அரசு பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கிறது. அதன்படி சோழவரம் என்னும் ஊரில் இருக்கும் அரசாங்க பள்ளிக்கு ஆசிரியராக சமுத்திரக்கனியால் அனுப்பி வைக்கப்படுகிறார் தனுஷ். தனுஷ் மட்டுமன்றி பல தனியார் பள்ளிகளில் இருக்கும் ஆசிரியர்கள் பல்வேறு மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கு ஆசிரியர்களாக அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இவர்கள் அனைவரும் தனியார் பள்ளிகளில் துணை ஆசிரியர்களாக பணிபுரிந்தவர்கள் என்பதால், இவர்களால் அரசு பள்ளிக்கு எந்தவித முன்னேற்றமும் இருக்காது என்ற கெட்ட எண்ணத்தில் சமுத்திரகனி இவ்வாறு செய்கிறார். சோழவரம் அரசாங்க பள்ளிக்கு கணக்கு வாத்தியாராக பணியாற்ற வருகிறார் தனுஷ்.


அங்கு அவர் மற்றொரு வாத்தியாராக இருக்கும் சம்யுக்தாவை சந்திக்கிறார். சம்யுக்தாவை சந்தித்து விட்டு மறுநாள் பள்ளிக்குச் செல்கிறார் தனுஷ். அங்கு அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஊரில் இருக்கும் மாணவர்கள் பலர் பத்தாம் வகுப்பு வரை தான் படித்திருக்கிறார்கள். பின்னர் அவர்கள் அனைவரும் கூலித்தொழில் செய்ய சென்று விடுகிறார்கள். 11 வது பன்னிரண்டாவது படிக்க வேண்டிய மாணவர்களை காசுக்காக பெற்றோர்களே இப்படி செய்கிறார்கள் என்பதை பார்த்த அதிர்ச்சி அடைகிறார் தனுஷ். பின்னர் இதை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கடுமையாக முயற்சி செய்கிறார். இந்த முயற்சியில் வெற்றி பெறும் நடிகர் தனுஷ் அவர்களை நன்றாக படிக்க வைத்து சிறந்த மதிப்பெண்களையும் எடுக்க வைக்கிறார். பின்னர் தனியார் பள்ளிகளின் முதலாளிகளாக இருக்கும் சமுத்திரகனி ஒரு நாள் சோழவரம் ஊருக்கு வருகிறார். அங்கு தனுஷ் செய்த செயலைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். கல்வியை நான் வியாபாரமாக செய்கிறேன். நீ அரசாங்கம் மாணவர்களை சிறந்த மதிப்பெண்கள் எடுக்க வைத்து என் வியாபாரத்தை அழிக்க நினைக்கிறாயா? என்று தனுஷை எச்சரிக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் இதற்கெல்லாம் பயப்படாத தனுஷ், அவர்களை நன்றாக படிக்க வைத்தாரா? சமுத்திரகனியிடம் விட்ட சவாலில் வெற்றி பெற்றாரா? சமுத்திரக்கனியின் சூழ்ச்சியிலிருந்து தனுஷ் எப்படி எல்லாம் தப்பித்து மாணவர்களை படிக்க வைத்தார் என்பதுதான் படத்தின் மீதி கதை.

 

படத்தில் தனுஷ் நடிப்பு மிகப் பிரமாதமாக இருக்கிறது. பல நேரங்களில் தனுஷும் சீருடை அணிந்திருப்பதால் அவர் வாத்தியாரா இல்லை மாணவரா என்கிற சந்தேகம் வருகிறது. அந்த அளவிற்கு இன்னும் இளமையாக இருக்கிறார் தனுஷ். சமுத்திரக்கனியிடம் விட்ட சவாலை ஏற்றுக் கொண்டு எப்படியாவது சாதிக்க வேண்டும் என்று போராடுகிறார். அவருடைய போராட்டமும், முயற்சியும், எப்படியாவது சாதிக்க வேண்டும் என்கிற உணர்வும் படம் முழுவதும் வரவேண்டும். ஆனால் இயக்குனர் அந்த தாக்கத்தை ஏற்படுத்த தவறிவிட்டார். கிளைமாக்ஸை எளிதில் யூகிக்கும் விதத்தில் அவர் வைத்திருப்பது பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. தனுஷின் குணத்தை கண்டு அவரை காதலிக்கும் சக ஆசிரியராக சம்யுக்தா டீச்சர் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். முதல் படத்திலேயே கைத்தட்டல்களை பெறுகிறார் சம்யுக்தா. கல்வி தாளாளர், கல்வி தந்தை என்று இந்த காலத்தில் பெருமையாக அழைக்கப்படும் கல்வி வியாபாரியாக நடித்து இருக்கும் சமுத்திரகனியின் வசனங்களும் நடிப்பும் மிக அருமை. கோச்சிங் சென்டர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் டார்கெட் மிடில் கிளாஸ் மக்கள் தான் என்று அவர் பேசும் வசனம் உண்மையை ஆணித்தரமாக உரைப்பதாக இருக்கிறது.

ஜிவி பிரகாஷின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது. வா வாத்தி பாடல் அற்புதமாக வந்திருக்கிறது. 1990 காலகட்டங்களில் நடக்கும் கதை என்பதால் காட்சி அமைப்புகள் மிக அருமை. தெலுங்கு படத்தின் வாடை பல இடங்களில் வீசியதால் ரசனை குறைவாக இருக்கிறது. தெலுங்கு இயக்குனர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் தெலுங்கு வாடை அதிகமாக வீசுவது தான் அவர்களுக்குள் இருக்கும் தடுமாற்றமாக இருக்கிறது. சின்ன சின்ன கதாபாத்திரங்களில் கூட தெலுங்கு நடிகர்களே படம் முழுவதும் ஆக்கிரமித்து இருப்பதால் தமிழ் படத்தை பார்த்த உணர்வை ஏற்படாமல் முழு தெலுங்கு படத்தை பார்த்த உணர்வு மட்டுமே ஏற்படுகிறது. அற்புதமான கருத்தை கதையாக எடுத்துக் கொண்ட தெலுங்கு இயக்குனர் தமிழ் ரசிகர்களின் உணர்வை ஒன்றிணைக்கும் இடத்தில் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.! எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றாலும் சமூகத்திற்கு தேவையான கருத்தை பாடமாக எடுத்திருக்கிறார் இந்த வாத்தி. வாத்தி படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங்.! 2.75/5

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்