பழைய வண்ணாரப்பேட்டை, ருத்ர தாண்டவம், திரௌபதி போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் மோகன் ஜி இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் தான் பகாசூரன். இந்த படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் நட்டி நட்ராஜ், மன்சூர் அலிகான், குக்கு வித் கோமாளி தர்ஷா ஆகிய பலர் உடன் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்திருக்கிறார். இந்த காலத்தில் மொபைல் போன்களால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பேசி இருக்கிறது இந்த திரைப்படம். தமிழ் சினிமாவில் எத்தனையோ பழி வாங்கும் கதைகள் வந்திருந்தாலும் இதுவும் ஒரு பழிவாங்கும் கதை தான். ஒரு சாதாரண பாசமான கிராமத்து அப்பாவின் மகளுக்கு ஏற்பட்ட பாலியல் வன்கொடுமைக்காக பழிவாங்கும் படலமாக இந்த கதை அமைந்திருக்கிறது. படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. தற்போது இந்த படம் எப்படி இருக்கிறது என்பது குறித்த முழு திரை விமர்சனத்தை பார்க்கலாம்.

கடலூர் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வருகிறார் செல்வராகவன். பின்னர் அவர் அங்கிருந்து சேலத்திற்கு வந்து ஒரு கோவிலில் சேவகம் செய்து ஒரு பரதேசி போல தனது வாழ்க்கையை நடத்தி வருகிறார் .இந்த நிலையில் அவர் திடீரென அடுத்தடுத்து மூன்று கொலைகளை செய்கிறார். அப்பாவியாக இருக்கும் ஒருவர் எதற்காக அந்த கொலைகளை செய்கிறார்? என்று கதை நகர்கிறது. இது ஒரு பக்கம் இருக்க மற்றொரு பக்கம் தனது அண்ணன் மகள் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார். அந்த கொலைக்கான பின்னணியை கண்டுபிடிக்க முன்னாள் ராணுவ அதிகாரியாக இருக்கும் நட்டி நடராஜ் முயன்று கொண்டிருக்கிறார். செல்வராகவன் இத்தனை பேரை கொலை செய்ய காரணம் என்ன? மேலும் நடராஜன் அண்ணன் மகள் தற்கொலை பின்னணியை கண்டுபிடித்தார் இல்லையா என்பது குறித்த கதை தான் படத்தின் மீதி கதை. சாணி காகிதம் மற்றும் பீஸ்ட் திரைப்படங்களுக்கு பிறகு மீண்டும் நடிகராக களம் இறங்கி இருக்கிறார் செல்வராகவன். கடலூரைச் சேர்ந்த தெருக்கூத்து கலைஞரான செல்வராகவனுக்கு தனது மகள் மீது கொள்ளை பிரியம். அவரின் விருப்பத்திற்காக பெரம்பலூரில் உள்ள கல்லூரியில் சேர்த்து படிக்க வைக்கிறார் செல்வராகவன்.

செல்வராகவனுக்கு இணையாக படம் முழுவதும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நட்டி நடராஜ். நட்டியின் அண்ணன் மகள் காதலிக்கும் காதலனின் வற்புறுத்தலின் பேரில் இணையத்தில் தவறான வீடியோக்களை வெளியிடுகிறார். அதைத் தொடர்ந்து அவர் பாலியல் தொழிலுக்குள் சிக்கிக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் வீட்டில் திருமணம் ஏற்பாடு செய்ய பாலியல் தொழில் செய்யும் கும்பல் அந்தப் பெண்ணை மிரட்டுகிறது. இதனால் மன உளைச்சலில் இருக்கும் அவர் தற்கொலை செய்து கொள்கிறார். இது ராணுவத்தில் மேஜராக பணிபுரிந்து கொண்டிருக்கும் அவரது சித்தப்பா நட்டி நடராஜுக்கு தெரிய வருகிறது. இதுபோல் பல பெண்கள் சிக்கி இருப்பதை அறியும் அவர் அவர்களை மீட்க போராடிக் கொண்டிருக்கிறார். மேலும் இதே போல் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவை தேடி அலைகிறார் இப்படியாக செல்வராகவன் பயணமும் நட்டியின் பயணமும் திரைக்கதை முழுவதும் நீண்டு கொண்டிருக்கிறது. இறுதியில் என்ன நடந்தது என்பது தான் படத்தில் இருக்கும் ட்விஸ்ட் படத்தில் இருவரும் நடிப்பும் அசுர நடிப்பாக இருக்கிறது் படத்திற்கு பின்னணி அமைத்திருக்கும் சாம் சிஎஸ் இசை படத்தை வேற லெவலுக்கு நகர்த்தி இருக்கிறது. பாடல்கள் எதுவும் அந்த அளவிற்கு ரசிக்கும் படியாக இல்லை. ஒளிப்பதிவு தொடங்கி தொழில்நுட்ப ரீதியாக முந்தைய படங்களை விட நன்றாக செய்திருக்கிறார் மோகன்ஜி.

சில இடங்களில் படத்தில் லாஜிக் ஓட்டைகளும் இருக்கவே செய்கிறது. 50 ஆண்டுகளுக்கு முன்னர் உருவான சிந்தனை தான் இந்த படம் என்று பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். பெண்கள் அடுப்பங்கறையில் இருந்தி இப்பொழுதுதான் வெளியில் வந்து கல்வி கற்கத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால் இதை பொறுத்துக் கொள்ளாத ஒருவர் எழுதிய கதையாக இந்த படம் இருப்பதாக தெரிகிறது. பெண்களை பாதுகாக்க வேண்டும் என்று சொல்ல வரும் இயக்குனர் படத்தில் ஆபாச நடனங்கள் வைத்திருப்பதெல்லாம் முரணாக இருக்கிறது. ஊருக்குள்ளேயே படிக்க வைக்க வேண்டியதுதானே, நம்ம பிள்ளைங்க ரூமுக்குள்ள என்ன பண்றாங்கன்னு கண்காணிக்கணும் போன்ற வசனங்கள் சற்று பிற்போக்குத்தனமாகவே தெரிகிறது. அதேபோல் ராணுவ மேஜராக வரும் நட்டி ஆதாரங்களை தேடி அலைந்து கொண்டிருக்கிறார். ஆனால் செல்வராகவன் அசால்டாக அடுத்தடுத்து கொலைகளை நடத்தி விட்டு சென்று கொண்டிருக்கிறார். இடையில் காவல்துறையின் பங்கே இல்லாதது போல் இருக்கிறது. சற்று பிற்போக்குத்தனங்கள் ஆன வசனங்கள் இருந்தபோதிலும் படத்தின் முதல் பாதையில் சற்று கவனிக்கும்படியாகத்தான் அமைக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அதற்கு எதிர் மாறாக இரண்டாம் பாதியாக அமைந்திருக்கிறது. இணையத்தில் பெண்கள் பாலியல் தொழில் ஈடுபடுவதை தடுப்பது நோக்கம் என்றால் அதன் உண்மையான காரணத்தை படத்தில் ஆராயவில்லை என்பதே நிதர்சனம். அந்த காரணங்களை ஆராய்வதை விட்டுவிட்டு பாலியல் தொழிலுக்கு காரணமாக இருப்பது போல “காதலையும், பெண் உரிமைகள் பேசுபவர்களையும் குற்றவாளி கூண்டில் நிறுத்தி இருக்கிறது இந்த திரைப்படம்”. திரைக்கதையில் கவனம் செலுத்தாமல் தனிப்பட்ட அரசியல் எதிர்ப்பாளர்களை கதைக்குள் இழுத்து விட்டதாகவே தெரிகிறது. ஆண் நண்பர்களை வீட்டிற்கு அழைத்து வருவது, செல்போன்களை பயன்படுத்துவது என்று அனைத்து விஷயங்களையும் தவறான கண்ணோட்டத்துடன் சித்தரித்து இருக்கிறது பகாசூரன். திரைப்படத்தில் தந்தை மகளின் பாசத்தை அழகாக எடுத்துக் காட்டி இருக்கிறார்கள். ஆபாச படம் எடுத்து பெண்களை மிரட்டுபவர்களை குற்றவாளிகளாக காட்டாமல் பெண்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்கிற பழைய பல்லவியே பாடி இருக்கிறது பகாசூரன்.

படத்தின் இறுதியில் வசனங்கள் பேசும் செல்வராகவும் செல்போன்களையும் அறிவியல் கண்டுபிடிப்புகளையும் ஆபத்தானது போல் சித்தரித்து பேசுகிறார். மேலும் நட்டி நமது பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும் என்று பேசுகிறார். பெண்கள் வெளியில் வரவேண்டும், கல்வி கற்கட்டும், அவர்களின் உடலை ஒரு பொருளாக பார்க்காமல் அவர்களையும் ஒரு உயிராக பார்க்க வேண்டும் என்று பல போராட்டங்கள் நடந்து தற்போது சமூகம் முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையில், பெண்களின் உடலை ஆபத்தானது போல காட்டி அறிவியல்களையும் ஆபத்தானதாக சித்தரித்து பின்னோக்கி இழுத்துச் செல்வதாகவே தெரிகிறது பகாசூரன். இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 2.5/5
Youtube Video Embed Code Credits: MRT Music