
ஜார்கண்ட் மாநிலத்தின் முதலமைச்சர் ரகுபர்தாஸ், பாரதீய ஜனதா கட்சியினர் அங்கு ஆட்சி நடத்தி வந்தனர். இந்த மாநிலத்தில் 81 இடங்களை கொண்டுள்ள சட்டசபை தொகுதியில் நவம்பர் 30-ந்தேதி தொடங்கி டிசம்பர் 20-ந்தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைப்பெற்றது. இதில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கும், காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது.
ஜார்கண்ட் மாநிலம் முழுவதும் நக்சலைட்டுகள் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் மாநிலம் முழுவதும், பெரும்பாலும் ஓட்டுப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 65.17 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
இன்று 23 ஆம் தேதி காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியுள்ளது. 8.30 மணிக்கு மேல் முன்னணி நிலவரங்கள் தெரிய வாய்ப்பு உள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது. முதல் முடிவு மதியம் 1 மணிக்கும், கடைசி முடிவு இரவு 8 மணிக்கும் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த மாநிலத்தில் ஆட்சியை அமைக்கும் அரசு யார் என்பது இன்று மாலைக்குள் தெரிய வந்து விடும். தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கூட்டணிக்கு ஆதரவாக அமைந்துள்ளன. அவை பலிக்குமா என்பதுவும் இன்று தெரிந்து விடும்.