தமிழ் திரையுலகில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக இருந்து தற்போது அரசியல்வாதி, தயாரிப்பாளர், சின்னத்திரை நடிகை என பன்முக அவதாரம் எடுத்திருக்கும் நடிகை குஷ்பூ ட்விட்டரில் இருந்து சில காலங்களுக்கு விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார். நச்சுத்தன்மை வாய்ந்த இந்த இடத்திலிருந்து விலகி சில காலங்களுக்கு பின்னர் மீண்டும் வர இருப்பதாக அவர் பதிவிட்டு வெளியேறியிருக்கிறார். அவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை குஷ்பு. தர்மத்தின் தலைவன் என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் என்ட்ரி கொடுத்த அவர் பின்னாளில் இரு நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக அவர் வாரிசு படத்தில் நடித்திருந்தார். ஆனால் அவர் நடித்த காட்சிகள் இடம் பெறவில்லை.
குஷ்புவை பொறுத்தவரை வெள்ளித்திரை, சின்னத்திரை, படத் தயாரிப்பாளர், நடிகை, மனைவி, இரண்டு பெண்களுக்கு தாய் என்று பன்முகத் திறமையாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் அரசியல்வாதியாகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார். ஆரம்பத்தில் திமுகவில் இணைந்த அவர் பின் அந்த கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளராக இருந்த அவர் பின்னர் அங்கிருந்தும் விலகி பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி சிறப்பாக செயல்பட்டு வருவதாக கூறி அந்த கட்சியில் இணைந்து பலருக்கும் அதிர்ச்சி கொடுத்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக மணிப்பூர் கலவரம் நாடு முழுவதும் பூதாகரமாகிக் கொண்டிருக்கும் நிலையில் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக இருக்கும் குஷ்பூ இது பற்றி கருத்துக்களை தெரிவித்து வந்தார். இருப்பினும் நெட்டிசன்கள் தொடர்ந்து அவரை கேள்வி கேட்டு வந்த நிலையில் தற்போது ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார் குஷ்பூ.
அதில் அவர் பதிவிட்டு இருப்பது, “வணக்கம் நண்பர்களே, நான் சில நச்சுத்தன்மையான சூழ்நிலையிலிருந்து சில நாட்கள் விலகி இருக்க விரும்புகிறேன். உங்களை எல்லாம் மீண்டும் சந்திக்கிறேன். அதுவரை டேக் கேர், நன்றாக இருங்கள், பாசிட்டிவாக இருங்கள், லவ் யூ ஆல் என்று பகிர்ந்திருக்கிறார்.

இந்தப் பதிவிற்கு கீழே நெட்டிசன்கள் பலரும் இதுபோன்ற நச்சுத்தன்மை வாய்ந்த சூழ்நிலையில் இருந்து நீங்கள் வெளியேறியது எங்களுக்கு மகிழ்ச்சி தான் என்று பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலரோ பிஜேபியை விட்டு விலகுகிறீர்களா? அல்லது பிஜேபியில் இருந்து சில காலம் விடுமுறையில் இருக்கப் போகிறீர்களா என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். மேலும் சிலரோ மணிப்பூர் கலவரம் குறித்து பதில் அளிக்க முடியாமல் இப்படி சமூக வலைதளங்களில் இருந்து குஷ்பூ விலகி ஓடுவதாகவும் அவர் மீது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்..!