Categories: சினிமா

மக்கள் மனங்களை வென்றானா மாவீரன்? முழு திரைவிமர்சனம் இதோ.! TamilGlitz ரேட்டிங் (?/5)

வெளியிட்டது

நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த படம் மாவீரன் திரைப்படம் எப்படி இருக்கிறது என்று இந்த பதிவில் முழுதாக பார்க்கலாம். தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அதிதி சங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று தமிழகமெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் மாவீரன். இந்த படம் குறித்து கருத்து தெரிவித்த பொதுமக்கள் கலவையான விமர்சனங்களை கூறி வருகின்றனர். முதல் பாகம் மிக நன்றாக இருந்ததாகவும் இரண்டாவது பாகம் ஏமாற்றத்தை கொடுத்ததாகவும் பலர் கூறி இருந்தனர். மண்டேலா படத்தை இயக்கி பலரது கவனத்தை திரும்பி பார்க்க வைத்த மடோன் அஸ்வின் இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இந்த படத்தின் கதை என்ன? படமர எப்படி இருக்கிறது? என்பது குறித்த முழு விமர்சனத்தை இந்த பதிவில் பார்க்கலாம். ஊழல்வாதிகளாக இருக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து கேள்வி கேட்க தயங்கும் மக்கள், ஒரு கட்டத்தில் கொதித்து எழுந்து கேள்வி கேட்க தொடங்கினால் என்ன ஆகும் என்பது தான் இந்த படத்தின் ஒன்லைன்.

மக்கள் மனங்களை வென்றானா மாவீரன்? முழு திரைவிமர்சனம் இதோ.! TamilGlitz ரேட்டிங் (?/5) 1

கார்ட்டூனிஸ்டாக இருக்கும் சத்யா (சிவகார்த்திகேயன்) பத்திரிக்கை நிறுவனம் ஒன்றில் கார்ட்டூன்ஸ்ட்டாக வேலைக்கு சேர பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு பத்திரிக்கை துறையில் உதவி ஆசிரியலாக இருக்கும் நிலா (அதிதி) மூலமாக வேலை கிடைக்கிறது. அந்த சமயம் சத்யா வாழும் குடியிருப்பு பகுதியை காலி செய்யுமாறும் சத்யாவின் குடும்பத்தையும், அந்த ஏரியா மக்களையும் ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு செல்லுமாறும் அறிவுறுத்தப்படுகின்றனர். குடிசை மாற்று வாரியத்தின் கீழ் கட்டப்பட்டிருக்கும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒவ்வொருவருக்கும் வீடு ஒதுக்கப்பட்டுள்ளதாக சொல்லி அரசியல்வாதி ஒருவர் அந்த மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துகிறார். முதலில் சத்யாவின் குடும்பத்தினர் இதற்கு மறுப்பு தெரிவிக்கின்றனர், பின்னர் அந்த குடியிருப்புச் செல்ல ஒப்புக் கொள்கின்றனர். பல வருடங்களாக குடிசை பகுதியிலும், சாக்கடை குப்பைமேடுகளுக்கு மத்தியில் வாழ்ந்தவர்களுக்கு புதிதாக கொடுக்கப்பட்ட வீடுகள் ஓரளவிற்கு நம்பிக்கையை கொடுக்கிறது.

ஆனால் அடுக்குமாடி குடியிருப்பிற்கு வந்த சில நாட்களிலேயே பிரச்சனை துவங்குகிறது. வீட்டு சுவர்களில் திடீரென விரிசல் ஏற்படுவதும், கதவு, ஜன்னல் ஆகியவை சேதமடைவதுமாக நாளுக்கு நாள் ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டே இருக்கிறது. கேள்வி கேட்கவே பயந்து நடுங்கும் கோழையாக இருக்கும் சத்யாவிற்கு சண்டையிடுவதிலும் தட்டி கேட்பதிலும் தயக்கம் இருக்கிறது. இதனால் அவரின் அம்மா சரிதாவுக்கும் சத்யாவுக்கும் இடையே சண்டை ஏற்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளாகும் சத்யா தற்கொலை முடிவு எடுக்கிறார். அப்போது அவருக்கு எதிர்பாராத நிகழ்வு ஒன்று நடக்கிறது. சத்யாவிற்கு ஒரு வித்தியாசமான சக்தி ஒன்று கிடைக்கிறது. அந்த சக்தி என்ன? அதை கொண்டு மக்களின் குறைகளை சிவகார்த்திகேயன் நிவர்த்தி செய்தாரா? பிறகு என்ன நடந்தது? என்கிற மீதி கதையை பேண்டஸி ஜானரில் உருவாக்கி இருக்கிறார் மடோன் அஸ்வின். சத்யா என்கிற கதாபாத்திரத்தில் தன்னை முழுவதுமாக பொருத்திக் காட்டி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

மண்டோலா படத்தின் மூலமாக ஒரே ஒரு வாக்கு எப்படி சமூகத்தில் மாற்றத்தை கொண்டு வரும் என்பதை அழகாக எடுத்துக்காட்டிய அஸ்வின் தற்போது மாவீரன் படத்திலும் ஒரு சமூக பிரச்சனையை எடுத்து வெற்றி கண்டுள்ளார். ஒரு ஹீரோ பல வில்லன்களை அடித்து வெல்ல முடியாது என்கிற எதார்த்தத்தை புரிந்து கொண்ட அவர், அங்கு ஒரு ஃபேண்டஸியை புகுத்தி புத்திசாலித்தனமாக கதையை நகர்த்தி, விமர்சனத்தையும் தடுத்து இருக்கிறார். குடிசை மாற்று வாரிய அமைச்சராக வரும் மிஷ்கின், வாக்களித்த மக்களுக்கு செய்யும் துரோகமும், அதை எதிர்த்து கேள்வி கேட்கும் மக்களையும் ஒரு புள்ளியில் இணைத்திருக்கிறார் இயக்குனர். யோகி பாபுவின் முதல் பாதியில் வரும் காமெடிகள் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. வடநாட்டு பணியாளராக யோகி பாபு அறிமுகமாகும் காட்சிகள் கைத்தட்டல்களைப் பெறுகிறது. வடசென்னையின் மொழி, தோற்றம்என அனைத்திலும் தன்னை ஒரு பக்கா சென்னை பையனாக மாற்றி நடித்துக் காட்டியிருக்கிறார் சிவகார்த்திகேயன்.

பத்திரிக்கை துறையில் உதவி ஆசிரியராக நடித்திருக்கும் அதிதி சங்கருக்கு பெரிய அளவிலான காட்சிகள் இல்லை. மோனிஷா, சரிதா, சுனில் ஆகியோர் நடப்புகள் படத்திற்கு பெரும் பலமாக அமைந்திருக்கிறது. மேலும் மிஷ்கினின் வில்லன் கதாபாத்திரம் அவருக்கு பக்காவாக பொருந்திப் போகிறது. மேலும் படத்திற்கு கூடுதல் வலுவாக விஜய் சேதுபதி குரலில் வரும் அசரீரி போன்ற வசனங்கள் மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. குரல் மட்டுமே கொடுத்து விஜய் சேதுபதி தனது பங்கை சிறப்பாக அளித்திருக்கிறார். முதல் பாதியில் கொடுக்கப்பட்ட கவனம் இரண்டாம் பாதியில் இல்லை என்று சொல்லும் அளவிற்கு கதை மெதுவாக நகர்கிறது. கட்டிடத்தில் மாட்டிக்கொண்ட குழந்தையை காப்பாற்றும் காட்சிகள் எல்லாம் நேரத்தை வழவழவென இழுத்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்தனர். அந்த காட்சிகளை குறைத்து இருந்தால் இந்த படம் சூப்பர் ஹீரோ படம் போல் அல்லாமல் பக்கா சிவகார்த்திகேயன் படமாக வந்திருக்கும் என்பதே பெரும்பாலருடன் கருத்து. பேண்டஸி என்கிற பெயரில் பல காட்சிகளை தவிர்த்து இருந்தால் இன்னும் படம் சிறப்பாக வந்திருக்கும் என்பதே பெரும்பான்மை கருத்தாக இருக்கிறது.

பரத் சங்கர் இசையில் வெளியான வண்ணாரப்பேட்டையிலே மற்றும் அந்தாண்ட இந்தாண்ட வங்கக்கரை என்கிற பாடல்கள் கூடுதல் வலு சேர்த்துள்ளது. மேலும் சண்டை மற்றும் மாஸ் காட்சிகளின் போது ஒளிபரப்பும் பிஜிமும், படம் முழுக்க வரும் பின்னணி இசையும் படத்திற்கு கூடுதல் வலுவாக அமைந்திருக்கிறது. யானிக் பென் சண்டை காட்சிகளும், விது ஐய்யனாவின் ஒளிப்பதிவும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்திருக்கிறது. பிரச்சனையிலிருந்து மக்களை காக்க போராடுபவனே உண்மையான மாவீரன் என்ற ஒன்லைனை படமாக்கிய மடோன் அஸ்வின் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்லாமல் பிரச்சனையை மட்டுமே பேசிக் கொண்டிருப்பதால் கதை கொஞ்சம் ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. லாஜிக்கை ஓரமாக ஒதுக்கிவிட்டு வைத்துப் பார்த்தால் மாவீரன் ஒருமுறை ரசிக்கக் கூடிய படம். பெயரில் மட்டும்தான் மாவீரன், கதையில் இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. இந்த படத்திற்கு தமிழ் க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் 3.0/5

Youtube Video Embed Code Credits: Sun TV

Editorial Team

As a die-hard fan of Tamil cinema, I've turned my passion into a profession, reporting on the latest news, scandals, and triumphs of Kollywood, and I can't wait to share the magic with you.

வெளியிட்டது

புதிய செய்திகள்