நடிகர் மாதவனின் மகன் தற்போது சர்வதேச நீச்சல் போட்டியில் 5 தங்கப் பதக்கங்களை வெற்றி பெற்றிருக்கிறார். தற்போது அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. தமிழ் திரையுலகின் ஒரு காலத்தில் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் மாதவன். இவர் 2000 ஆம் ஆண்டு அலைபாயுதே என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமானார். அன்று தொடங்கி இன்று வரை இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. இவர் கடைசியாக ராக்கெட்டரி நம்பி விளைவு என்கிற படத்தில் நடித்திருந்தார். இதில் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாறில் நடித்து அசத்தியிருந்தார். தொடர்ந்து ஜிடி நாயுடுவின் பயோபிக்கிலும் இவர் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. மேலும் இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ஒரு படத்திலும், டெஸ்ட் என்கிற இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார் மாதவன். இவர் 1999 ஆம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு வேதாந்த் என்கிற மகன் இருக்கிறார். 16 வயது ஆகும் வேதாந்த் நீச்சல் வீரர் ஆவார்.

இவர் இந்தியா சார்பில் பல நீச்சல் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றிருக்கிறார். 2021 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடைபெற்ற தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் பங்கு பெற்று 7 பதக்கங்களை வென்று அசத்தியிருந்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற 800 மீட்டர் பிரிவில் தங்கப்பதக்கம் வென்று சாதித்து காட்டி இருந்தார் வேதாந்த். வெறும் பத்து மில்லி நொடிகள் வித்தியாசத்தில் தங்க பதக்கத்தை கைப்பற்றி இருந்தார். அப்போது பேசியது அவர், அப்பாவின் நிழலில் தான் வாழ விரும்பவில்லை, அவரது மகனாக மட்டுமே இருக்க வேண்டும், எனக்கென்று ஒரு பெயரை உருவாக்க விரும்புகிறேன், எனது குடும்பம் எனக்கு தொடர்ச்சியாக ஆதரவை கொடுத்து வருகிறார்கள். எனக்காகத்தான் எனது பெற்றோர்கள் துபாய்க்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர் என்று பேசி இருந்தார். மேலும் தற்போது மலேசியாவில் நடந்த மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன் போட்டியில் கலந்து கொண்டு 5 தங்கப் பதக்கங்களை வென்றிருக்கிறார் வேதாந்த்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கும் மாதவன், கடவுளின் கருணையாலும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களாலும் வேதாந்த் ஐந்து தங்க பதக்கங்களை இந்தியாவிற்காக வென்றிருக்கிறார். 50, 100 200, 400 மற்றும் 1500 மீட்டர்களில் ஐந்து தங்கப் பதக்கங்களை அவர் வென்றிருக்கிறார். மலேசியன் இன்விடேஷனல் ஏஜ் குரூப் சாம்பியன்ஷிப் 2003 கோலாலம்பூரில் நடைபெற்றது. இந்த போட்டியில் அவர் வெற்றி பெற்று இருக்கிறார். எனக்கு மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறது என்று மாதவன் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் வேதாந்த் 2026 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் கலந்து கொள்ள இருக்கிறார். இதற்காக துபாய்க்கு குடிபெயர்ந்து இருக்கிறார் மாதவன்.
ஏற்கனவே மாதவன் அளித்த பேட்டியில், கொரோனா காரணமாக மும்பையில் இருக்கும் நீச்சல் குளங்கள் மூடப்பட்டு இருப்பதால் தன் மகனுக்கு பயிற்சி பெற வேண்டும் என்பதற்காக துபாய்க்கு குடிபெயர்ந்து இருக்கிறோம். ஒலிம்பிக் போட்டியில் தனது மகன் வேதாந்த் பங்கு பெற பயிற்சி பெற்று வருகிறார் என்று கூறியிருந்தார். தொடர்ந்து தங்கப்பதக்கங்களை அள்ளி வரும் மாதவனின் மகன் நிச்சயமாக 2026 ஆம் ஆண்டு நடக்க இருக்கும் ஒலிம்பிக் போட்டியிலும் பங்கேற்று இந்தியா சார்பில் விளையாடி பதக்கங்களை வெல்வார் என்று அவர்கள் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.