
சேலம் மாவட்டத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேட்டூர் அணையில் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் காவிரி நீரை தேக்கி வைக்கப்படுகிறது. இந்த அணையில் இரண்டு நீர் மின் நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்படும் நீரால், 12 மாவட்டங்களைச் சேர்ந்த 16.05 லட்சம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பல்வேறு மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் மற்றும் தொழிற்சாலைகளின் தேவை பூர்த்தி செய்யப்பட்டும் வருகிறது.
நடப்பாண்டில் செப்டம்பர் மாதம் தென்மேற்கு பருவமழை தீவிரமடையும் சூழ்நிலையில் கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து விட்டது. இதனால் திறந்துவிடப்பட்ட உபரி நீரால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நீர் பிலிகுண்டுலு, ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணையை வந்து சேர்ந்தது. ஒரே மாதத்தில் இரண்டு முறை முழு கொள்ளளவை எட்டி ஆச்சரியமூட்டியது.
தற்போது தென்மேற்கு பருவமழை முடிவடைந்து, அதனை தொடர்ந்து, வடகிழக்கு பருவமழை தொடங்கி இருக்கிறது மீண்டும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது, இந்நிலையில் நடப்பாண்டில் 3வது முறையாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. குறிப்பாக கடந்த 2 மாதங்களில் 3வது முறை நீர்மட்டம் 120 அடியை எட்டி சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேட்டூர் அணையின் வரலாற்றில் 86 ஆண்டுகளில் 44வது முறையாக தற்போது முழு கொள்ளளவை எட்டியுள்ளது.