நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிலர் இன்று காலை பத்து தல படத்தை பார்ப்பதற்காக சென்னையில் உள்ள பிரபல ரோகிணி திரையரங்கிற்கு சென்று இருக்கின்றனர். அங்கு அவர்களை உள்ளே விட அனுமதி மறுத்து வாயிற் காவலர்கள் அவர்களை வாசலிலேயே நிற்க வைத்திருந்தனர். அதை எதிர்த்து இளைஞர் ஒருவர் கேள்வி கேட்க அந்த வீடியோ இணையத்தில் வைரலாக தொடங்கிய நிலையில், தற்போது ரோகிணி திரையரங்கம் அந்த செயலுக்கு மன்னிப்பு தெரிவித்து விளக்கம் ஒன்றையும் அளித்திருக்கின்றனர். மேலும் அவர்கள் சரியான சமயத்தில் உள்ளே வந்து படம் பார்த்த விஷயத்தையும் வீடியோவாக வெளியிட்டு இருக்கின்றது ரோகிணி திரையரங்கம். நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குனர் ஒப்பிலி கிருஷ்ணா இயக்கத்தில் இன்று வெளியாகி இருக்கும் திரைப்படம் தான் பத்து தல. இந்த படத்தை பார்ப்பதற்காக பலரும் காத்திருந்த நிலையில் இன்று அதிகாலை 5 மணி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டிருந்தது. எனவே எட்டு மணி ஷோவை பார்க்க பலரும் கூட்டம் கூட்டமாக கிளம்பி வந்திருந்தனர். அந்த வகையில் நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த சிலரும் ரோகினி திரையரங்கிற்கு படம் பார்க்க வந்திருந்தனர். வீடியோ கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அப்போது டிக்கெட் உடன் நின்றிருந்த அவர்களை வாயிற் காவலர்கள் உள்ளே விட மறுத்தனர்.. இதையடுத்து இளைஞர்கள் ஒருவர் அவர்கள் கையில் தான் டிக்கெட் இருக்கிறதே ஏன் உள்ளே விட மறுக்கிறீர்கள் என்று கோபத்துடன் கேள்வி எழுப்பினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானதைத் தொடர்ந்து ஜி.வி பிரகாஷ் உட்பட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர். “கலை அனைவருக்கும் சொந்தமானது, இது போன்ற செயல்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. தாமதமாக அவர்கள் உள்ளே விடப்பட்டார்கள் என்ற செய்தி கிடைக்கிறது. இருந்தாலும் முன்பு நடந்த செய்தி கண்டிக்கத்தக்கது” என்று ஜீவி பிரகாஷ் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் வெளியே வந்த பின்பு பேட்டி அளித்த நரிக்குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், தங்கள் உடலில் துர்நாற்றம் வீசும் என்றும் தாங்கள், வெற்றிலை பார்த்து போடுபவர்கள் என்றும், ஆங்காங்கே சென்று பணம் கேட்பவர்கள் உங்களை உள்ளே விட முடியாது என்று அவர்கள் கூறியதாக வேதனையுடன் தெரிவித்தார்.
தொடர்ந்து ட்விட்டரில் ரோகினி திரையரங்கிற்கு எதிராக பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். பைகாட் ரோகிணி தியேட்டர் என்கிற ஹேஷ்டேக்கும் இணையத்தில் ட்ரெண்டாக தொடங்கியது. இந்த நிலையில் தற்போது ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்திருக்கும் ரோகிணி திரையரங்கம் நடந்தவற்றிற்கு மன்னிப்பு கேட்டு இருக்கிறது. மேலும் குழந்தைகள் பெரியவர்கள் என அனைவரும் இருக்கையில் அமர்ந்து படம் பார்க்கும் வீடியோவையும் வெளியிட்டு விளக்கம் அளித்து இருக்கிறது. இருந்தபோதிலும் இன்றைய காலகட்டத்தில் கூட இதுபோல நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுகிறதே என்கிற வேதனை பலரிடையே எழுந்திருக்கிறது. நீங்களும் அந்த செய்தியை காண..! கீழே கொடுக்கப்பட்டுள்ள வீடியோவை பார்க்கவும்..! Watch the Below Video..!
YouTube Video Embed Code Credits: Polimer News