பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது வசூலை வாரி குவித்து வருகிறது. இரண்டாவது நாள் வசூலாக 150 கோடி வசூலை குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. மிகப்பிரமாண்டமாக வெளியான இந்த படத்தில் விக்ரம், கார்த்திக், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா போன்ற முன்னணி கதாபாத்திரங்கள் பல நடித்திருந்தனர். நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிக அதிகமாக இருந்தது. மேலும் படம் உலக அளவில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா என பல இடங்களில் டிக்கெட் விற்பனை அமோகமாக இருந்தது. எனவே படம் ஆயிரம் கோடிக்கும் மேல் வசூலை குவிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

படம் வெளியாகி முதல் நாள் வசூல் எவ்வளவு இருக்கும் என்று எதிர்பார்ப்பு நிலவியது. தமிழகத்தில் பல இடங்களில் தியேட்டர்கள் அனைத்தும் முன்பதிவுகளால், அடுத்த வாரங்கள் வரை ஹவுஸ்ஃபுல்லாக நிரம்பி வழிகிறது. இந்த நிலையில் படம் வெளியாகி நேற்று மட்டுமே 80 கோடி வசூலை குவித்து இருந்தது. இந்த தகவலை படத்தை தயாரித்த லைக்கா நிறுவனமே தனது அதிகாரபூர்வ பக்கத்தில் அறிவித்து இருந்தது. அதில் பொன்னியன் செல்வன் திரைப்படம் உலகம் முழுவதிலும் எண்பது கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது என்று அறிவித்து இருந்தது. தமிழகம் மற்றும் அமெரிக்காவில் வசூல் அதிகம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் 27 கோடி ரூபாய்க்கு வசூல் செய்துள்ளதாக திரைப்பட அனலிஸ்ட் ஆன ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் இன்று இரண்டாவது நாளாக வசூல் 150 கோடியை தாண்டி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் இந்தியா, அரபு நாடுகள், ஸ்ரீலங்கா, மலேசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வசூலில் முதலிடத்தையும், அமெரிக்காவில் முதல் ஐந்து இடங்களில் ஒன்றாகவும் பொன்னியின் செல்வன் திகழ்வதாகவும் ரமேஷ் பாலா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார். 2022 ஆம் ஆண்டில் அதிகபட்ச ஓப்பனிங் ஆக அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவில் விக்ரம் படத்தின் சாதனையை முறியடித்து பொன்னியின் செல்வன் இருப்பதாகவும் அவர் பதிவிட்டு இருக்கிறார்.