ஈரான்-அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கிடையிலான போர் பதற்றம் காரணமாக இந்தியாவின் பொரளாதாரத்திற்கு பெரும் சரிவு ஏற்படக் கூடும் என கணிக்கப்படுகிறது.
பொருளாதார மந்தநிலை காரணமாக திணறி வரும் இந்தியாவின் பொருளாதாரத்திற்கு மற்றோமோர் சிக்கல் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவின் ஏற்றுமதி சரிவில் இருந்து வருகிறது. இதனாலும் பொருளாதாரம் சரிந்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் ஈரான் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்துள்ளன. ஈரானின் தலைமை ஜெனரல் காசிம் சுலைமானி அமெரிக்காவின் தாக்குதலில் பலியானதையடுத்து பதற்றம் நிலவி வருகிறது. இதனால் தற்போது அமெரிக்க இராணுவ படையை பயங்கரவாத அமைப்பு என ஈரான் அறிவித்துவிட்டது.

இதனால் சர்வதேச நாடுகள் மத்தியில் போர் மூளும் அச்சம் தென்படுகிறது. அதேவேளையில் இந்தியாவின் வணிகம் சார்ந்த பிரச்சனைகள் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன. பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்த வண்ணம் இருக்கிறது.
இதுகுறித்து இந்திய ஏற்றுமதி அமைப்புகளின் கூட்டமைப்பு தலைவர் சரத் குமார் சராஃப் கூறுகையில், “இந்தியாவுக்கான முக்கிய வர்த்தக கூட்டணி நாடாக ஈரான் உள்ளது. அமெரிக்கா- ஈரான் இடையே மூண்டுள்ள பிரச்னை நிச்சயம் நம்மை பாதிக்கும். ஈரான் – இந்தியா இடையேயான வர்த்தக ஒப்பந்தத்தின் அடிப்படையில் தற்போதைய சூழலில் பெரும் சரக்குகள் இந்தியாவிலிருந்தே ஏற்றுமதி செய்யப்படுகின்றன” என்றார்.