ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சரிகமப என்கிற ரியாலிட்டி ஷோவின் போட்டியாளர் ஒருவர் மீது சாதிய கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட புகைப்படங்களும் தற்போது வெளியாகி இருக்கிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை போலவே ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு ரியாலிட்டி ஷோ தான் சரிகமப. மூன்று சீசட்ன்களை முடித்திருக்கும் இந்த நிகழ்ச்சியில் தற்போது லிட்டில் சாம்ப்ஸ் என்று சிறுவர்கள் பங்குபெறும் சீசன் 3 நடந்து வருகிறது. இதில் பெரியவர்கள் பங்கெடுத்த சீசன் 2வில் கலந்து கொண்டவர் தான் பாடகர் பிரகாஷ்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆயிப்பட்டியைச் சேர்ந்த 26 வயதாகும் இவர், தீபாவளி தினத்தன்று தன்னுடைய உறவினரோடு பட்டாசு வாங்குவதற்காக சென்றுள்ளார். அந்த சமயம் மாற்று சமூகத்தினர் அவரை வழிமறித்து பீர் பாட்டிலால் தலையில் 15 முறை கொடூரமாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். உயிருக்க ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பிரகாஷின் வாழ்க்கை முழுவதுமே துயரங்கள் நிறைந்ததாகவே இருந்துள்ளது. பிரகாஷ் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது மாற்று சமூகத்தினர் கல் எடுத்து எறிந்ததில் தனது தந்தை இறந்து விட்டதாகவும், அதன் பின்னர் தன்னை வளர்த்து வந்த தாய்க்கும் கால் செயல் இழந்து போய்விட்டதாகவும் சரிகமப நிகழ்ச்சியில் பேசியிருந்தார். விவசாய குடும்பத்தைச் சேர்ந்த அவர் தனது திறமையால் கிராமத்தின் சுற்று பகுதிகளில் ஆர்கெஸ்ட்ரா நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வந்தார்.

பின்னர் 2019ம் ஆண்டு ஜீ தமிழில் ஒளிபரப்பான சரிகமப சீசன் இரண்டில் போட்டியாளராக அறிமுகமாகி இருந்தார். இவர் பாடிய பாடலை கேட்டு சிறப்பு விருந்தினராக வந்த இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜ் மேடையில் வந்து இவரை கட்டித் தழுவி பாராட்டி இருந்தார். இப்படி பிரபலமாக இருந்த பிரகாஷுக்கு தற்போது சாதி வெறி தாக்குதல் நடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கற்களை வீசியும், பீர் பாட்டினால் தாக்கியும் பிரகாஷை கடுமையாக தாக்கியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வரும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.