சரஸ்வதி சிந்து நாகரீகம் என குறிப்பிட்ட நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமனுக்கு கண்டனங்களை பதிவு செய்துள்ளார் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார்.
2020-21ஆன் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த்தார்.

அப்போது பேசிய அவர் சிந்து சமவெளி நாகரிகத்திற்கு பதிலாக சரஸ்வதி சிந்து நாகரீகம் என குறிப்பிட்டு பேசினார். இது தமிழ்நாட்டு எம்.பிக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்களவை உறுப்பினர் ரவிக்குமார், “நிதியமைச்சர் இன்று பட்ஜெட் உரையின்போது சிந்துவெளி நாகரிகத்தைப் பற்றி குறிப்பிடும் போதெல்லாம் சரஸ்வதி சிந்து நாகரிகம் என்று குறிப்பிட்டார்.
சிந்துவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம் என்று ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டு வரும் வேளையில், சிந்துவெளியில் கிடைத்த எழுத்துக்கள் தமிழ் எழுத்துக்களின் தொன்மை வடிவங்கள்தான் என்று அஸ்கோ பர்ப்போலா, ஐராவதம் மகாதேவன் முதலானோர் மெய்ப்பித்திருக்கும் வேளையில் அதை வேதகாலத்தோடு இணைத்து வேதங்களில் குறிப்பிடப்பட்ட சரஸ்வதி என்ற கற்பனையான நதியை அதோடு சேர்த்து சிந்துவெளி நாகரிகத்தைத் தன்வயப்படுத்த முயன்றுவரும் சங்கப்பரிவாரங்களின் அரசியல் தொடர்ச்சியாகவே இன்றைய நிதியமைச்சரின் கூற்றைப் பார்க்கவேண்டியிருக்கிறது.
வரலாற்றைத் திரிக்கும் இத்தகைய முயற்சிகளை நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. பூமி திருத்தி உண் – என்ற ஆத்திச்சூடியை குறிப்பிட்டு அது, அவ்வை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது என நிதியமைச்சர் கூறினார். அது தவறு. சங்ககால அவ்வையும் ஆத்திச்சூடி பாடிய அவ்வையும் வேறு வேறு. ஆத்திச்சூடி பாடிய ஔவை 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்” என்று தெரிவித்துள்ளார்.