தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களை திரும்ப தாய்நாட்டிற்கு அழைத்து செல்ல நடவடிக்கை எடுத்து வருவதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த உள்நாட்டு போர் கடந்த 2009ஆம் ஆண்டு நிறைவடைந்தது. அதில் விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார்.
அதன் பின்னர் இலங்கை தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் தாக்குதல் நடத்தி இனப்படுகொலை நடத்தி வந்தது. அப்போது தப்பித்து வந்த ஈழ தமிழர்களுக்கு அடைக்கலம் தந்தது தமிழ்நாடு.

தற்போது தமிழ்நாட்டில் பல்வேறு முகாம்களில் ஈழ தமிழர்கள் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டுமென ஒருசாராரும், இரட்டை குடியுரிமை வழங்க வேண்டுமென மற்றோரு சாராரும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
இந்நிலையில் திருத்தப்படட குடியுரிமை சட்டத்தில் ஈழ தமிழர்களுக்கு இடமில்லாமல் போனது. இதனை தொடர்ந்து அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
ஆனால் தற்போது இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டெல்லியில் சந்தித்து பேசினார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை தமிழர்கள் விவகாரம் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தமிழகத்தில் தஞ்சமடைந்துள்ள 3000 அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், இலங்கை செல்ல விரும்பிய 3000 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் தினேஷ் குணவர்த்தன கூறியுள்ளார்.
சில மாதங்களில் அவர்கள் சொந்த ஊருக்கு திரும்புவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்தத்தில் இலங்கை தமிழர்கள் இடம்பெறாததையடுத்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றன. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என சட்டமன்றத்தில் ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்ட நிலையில், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.