நடிகர்கள் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை 4:00 மணி முதல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர் ரகுமான், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக திரைக்கு வந்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த படம் ஒரு நாவலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் இந்த படத்தில் வெளியான ட்ரெய்லர், டீசர், போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் படம் இன்றைக்கு வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த படம் குறித்த விமர்சனங்களை பார்க்கலாம்.

திருநெல்வேலிக்கு அருகே கருவாக்குளம் என்னும் கிராமத்தில் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு. படித்த இளைஞர் என்ற போதிலும் முள் காட்டில் வேலை செய்து வருகிறார். தன் மகனை எப்படியாவது ஒரு நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று தாயார் ராதிகா நினைக்கிறார். அந்த சமயம் சிம்புவுக்கு ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது. இதனால் சிம்புவின் தாய் ராதிகாவிற்கு பயம் உண்டாகிறது. எப்படியாவது மகனை வேறு வேலைக்கு அனுப்பி விட தாய் ராதிகா நினைக்கிறார். இதற்காக ஒருவரிடம் ராதிகா உதவி கேட்கிறார். உதவி கேட்ட அந்த நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார். எனவே அவர் பார்த்து வந்த வேலையை பார்ப்பதற்காக, சிம்பு மும்பைக்கு போகிறார். மும்பையில் இசக்கி பரோட்டா கடை என்ற கடையில் வேலை பார்க்கிறார். அங்கு தன்னுடன் தங்கி இருப்பவர்களை சிலர் கொல்வதை பார்த்த அவர் அவர்களை பழிவாங்க நினைக்கிறார்.
இங்கருந்து அவர் கேங்ஸ்டர் கும்பலுடன் இணைந்து டான் ஆக மாறுகிறார். கிராமத்திலிருந்து சாதாரண இளைஞனாக கிளம்பி வந்த முத்து(சிம்பு) எப்படி முத்து பாயாக மாறுகிறார்? மும்பையை தனது கட்டுப்பாட்டில் எவ்வாறு கொண்டு வருகிறார்? எப்படி கேங்ஸ்டர் ஆக மாறுகிறார்? என்பது குறித்த படம்தான் வெந்து தணிந்தது காடு. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்த சாதாரண இளைஞன் எப்படி ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பது குறித்த கதை தான் வெந்து தணிந்தது காடு. நாயகன், பாட்ஷா, புதுப்பேட்டை போன்ற பல கேங்ஸ்டர் படங்களை பார்த்துள்ளது தமிழ் சினிமா. அந்த வகையில் தற்போது சிம்பு நடிப்பிலும் ஒரு கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை திரையில் பார்க்கும் பொழுது பல படங்களை பார்த்த உணர்வுகள் எழுந்தாலும், கௌதம் வாசுதேவ் மேனனின் வித்தியாசமான கதையும்,
ஏ.ஆர் ரகுமானின் இசையும் இந்த படத்தை வேறு கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றது.
மொத்தத்தில் “வெந்து தணிந்தது காடு” வென்றது – Venthu Thaninthathu Kaadu Tamilglitz Rating: 3.5/5