நடிகர்கள் சிம்பு, சித்தி இத்னானி, ராதிகா ஆகியோர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் காலை 4:00 மணி முதல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. கௌதம் வாசுதேவ் மேனன், ஏ.ஆர் ரகுமான், சிம்பு கூட்டணியில் மூன்றாவது முறையாக திரைக்கு வந்துள்ள படம் தான் வெந்து தணிந்தது காடு. இந்த படத்தை ஐசரி கணேசனின் வேல்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்து இருக்கிறது. மாநாடு படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து வெந்து தணிந்தது காடு படத்திற்கான எதிர்பார்ப்பு அதிக அளவில் இருந்தது. இந்த படம் ஒரு நாவலை மையப்படுத்தி உருவாகி இருக்கிறது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. மேலும் இந்த படத்தில் வெளியான ட்ரெய்லர், டீசர், போஸ்டர்கள், பாடல்கள் என அனைத்தும் மிகப்பெரிய ஹிட் அடித்த நிலையில் படம் இன்றைக்கு வெளியாகியிருக்கிறது. தற்போது இந்த படம் குறித்த விமர்சனங்களை பார்க்கலாம்.

படத்தின் கதை
திருநெல்வேலிக்கு அருகே கருவாக்குளம் என்னும் கிராமத்தில் தாய் ராதிகா மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் சிம்பு. படித்த இளைஞர் என்ற போதிலும் முள் காட்டில் வேலை செய்து வருகிறார். தன் மகனை எப்படியாவது ஒரு நல்ல வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று தாயார் ராதிகா நினைக்கிறார். அந்த சமயம் சிம்புவுக்கு ஒரு சிறிய விபத்து ஏற்படுகிறது. இதனால் சிம்புவின் தாய் ராதிகாவிற்கு பயம் உண்டாகிறது. எப்படியாவது மகனை வேறு வேலைக்கு அனுப்பி விட தாய் ராதிகா நினைக்கிறார். இதற்காக ஒருவரிடம் ராதிகா உதவி கேட்கிறார். உதவி கேட்ட அந்த நபர் தற்கொலை செய்து கொண்டு இறந்து விடுகிறார். எனவே அவர் பார்த்து வந்த வேலையை பார்ப்பதற்காக, சிம்பு மும்பைக்கு போகிறார். மும்பையில் இசக்கி பரோட்டா கடை என்ற கடையில் வேலை பார்க்கிறார். அங்கு தன்னுடன் தங்கி இருப்பவர்களை சிலர் கொல்வதை பார்த்த அவர் அவர்களை பழிவாங்க நினைக்கிறார்.

இங்கருந்து அவர் கேங்ஸ்டர் கும்பலுடன் இணைந்து டான் ஆக மாறுகிறார். கிராமத்திலிருந்து சாதாரண இளைஞனாக கிளம்பி வந்த முத்து(சிம்பு) எப்படி முத்து பாயாக மாறுகிறார்? மும்பையை தனது கட்டுப்பாட்டில் எவ்வாறு கொண்டு வருகிறார்? எப்படி கேங்ஸ்டர் ஆக மாறுகிறார்? என்பது குறித்த படம்தான் வெந்து தணிந்தது காடு. ஒரு வரியில் சொல்ல வேண்டுமென்றால் கிராமத்தில் இருந்து கிளம்பி வந்த சாதாரண இளைஞன் எப்படி ஒரு கேங்ஸ்டர் ஆக மாறுகிறார் என்பது குறித்த கதை தான் வெந்து தணிந்தது காடு. நாயகன், பாட்ஷா, புதுப்பேட்டை போன்ற பல கேங்ஸ்டர் படங்களை பார்த்துள்ளது தமிழ் சினிமா. அந்த வகையில் தற்போது சிம்பு நடிப்பிலும் ஒரு கேங்ஸ்டர் படமாக இந்த படம் உருவாகி இருக்கிறது. இந்தப் படத்தை திரையில் பார்க்கும் பொழுது பல படங்களை பார்த்த உணர்வுகள் எழுந்தாலும், கௌதம் வாசுதேவ் மேனனின் வித்தியாசமான கதையும்,
ஏ.ஆர் ரகுமானின் இசையும் இந்த படத்தை வேறு கட்டத்திற்கு நகர்த்தி செல்கின்றது.

படத்தின் பாசிட்டிவ் விஷயங்கள்:
- சிம்புவின் நடிப்புதான். டீன் ஏஜ் பையனாக தன்னை காட்டுவதற்காக உடலை மிகவும் வருத்தி இருக்கிறார் சிம்பு. மேலும் சென்டிமென்ட், ஆக்ஷன் போன்ற அனைத்திலும் கலக்கி இருக்கிறார்.
- கிராமத்தில் வரும் இளைஞனாக, பின்னர் வேலை பார்க்கும் இடத்தில், அதன் பின்னர் கேங்ஸ்டர் ஆக மாறிய பின்னர் என்று மொத்தம் மூன்று லுக்கில் அவர் நடிப்பில் அசத்தியிருக்கிறார். அதற்காக அவர் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார்.
- கதாநாயகியாக வரும் சித்தி இத்னானி முதல் படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். வழக்கம் போல ராதிகாவும் அம்மா கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பில் அசத்தி எடுத்திருக்கிறார்.
- படம் முழுவதும் சிம்புவையே மையப்படுத்தி இருப்பதால், முத்து கதாபாத்திரம் படம் முழுவதுமே காட்டப்படுகிறது.
- ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு கூடுதல் வலு சேர்த்து இருக்கிறது. ஸ்ரேயா கோஷாலின் உன்ன நெனச்சதும் மெலடி பாடலும், மல்லிப்பூ பாடலும் கைத்தட்டல்களை பெறுகிறது.

நெகட்டிவ் விஷயங்கள்:
- படம் 3 மணி நேர காட்சிகள் என்பதால் மிக மெதுவாக நகர்கிறது. முதல் பாதி ஆமை வேகத்தில் நகர்ந்த போதிலும், இரண்டாவது பாதி வேகமாகவே நகர்கிறது.
- இரண்டு கேங்க்ஸ்டர் கும்பலுக்கு இடையே நடக்கும் சண்டை காட்சிகள் வழக்கமான ஸ்டன்ட் போல் அல்லமால் யதார்த்தமான சண்டைக் காட்சிகளாகவே இருக்கிறது. பயங்கர ஸ்டன்ட் காட்சிகளை எதிர்பார்த்து சென்ற ரசிகர்களுக்கு இது சிறிது ஏமாற்றமே.
- மேலும் வழக்கமான கேங்ஸ்டர் படம் இரு கோஷ்டிகளுக்கு இடையேயான மோதல், டான் பில்டப் என பார்த்து பார்த்து புளித்துப் போன கதையாக இருப்பதால் இது எந்த ஒரு வித்தியாசத்தையும் காட்டாமலேயே முடிகிறது படம்.
- இரண்டாவது பாகம் எடுக்க வேண்டும் என்பதற்காக கிளைமேக்ஸ் சாதாரணமாக முடிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிம்புவின் வித்தியாசமான நடிப்பிற்காகவே இந்த படத்தை ஒரு முறை தியேட்டரில் பார்க்கலாம்.
மொத்தத்தில் “வெந்து தணிந்தது காடு” வென்றது – Venthu Thaninthathu Kaadu Tamilglitz Rating: 3.5/5