பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் நடந்த பயங்கர விபத்தில் விஜய் ஆண்டனிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில் தற்போது விஜய் ஆண்டனியே அது குறித்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். இசையமைப்பாளராக இருந்து பின்னர் நடிகராக மாறி இருப்பவர் விஜய் ஆண்டனி. இவர் தற்போது பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் உள்ள லங்காவி தீவில் நடைபெற்று வந்தது. இங்கு ஆக்சன் காட்சிகள் எடுக்கப்பட்டு வந்த நிலையில் கடலில் பயன்படுத்தப்படும் ஸ்கை ஜெட் ஒன்றோடு ஒன்று மோதி விஜய் ஆண்டனிக்கு பலத்த காயம் ஏற்பட்டது என்றும், நீச்சல் தெரியாததால் அவர் கீழே விழுந்து அவருடைய முகங்கள் எல்லாம் சேதம் ஆகிவிட்டது என்றும் தகவல்கள் இணையத்தில் வேகமாக பரவி வந்தன. மேலும் அவர் கோலாலம்பூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் எனவும் கூறப்பட்டது.

ஸ்கூட்டர் போட் ஓட்டும் காட்சிகள் எடுக்கும் பொழுது நடந்த விபத்தினால் அவர் தண்ணீரில் மூழ்கிதாகவும் அதற்கு நீச்சல் தெரியாததால் துணை ஒளிப்பதிவாளர் ஒருவர் காப்பாற்றியதாகவும் தகவல் வெளியானது. மேலும் முகத்தில் ஏற்பட்ட காயங்களால் பற்கள் உடைந்ததாகவும் கூறப்பட்டது. இதனால் அவர் மருத்துவமனையில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய இருப்பதாகவும் வதந்திகள் கொடி கட்டிப் பரவத் தொடங்கின. இது போன்று பல தகவல்கள் உலா வந்த நிலையில் மருத்துவமனையோ அல்லது விஜய் ஆண்டனி தரப்போ எந்த விதமான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சுசீந்திரன் அறிக்கை ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். அதில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் விபத்தில் காயம் அடைந்த விஜய் ஆண்டனி இரண்டு நாட்களுக்கு முன்பே சென்னையில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பி விட்டதாகவும், இரண்டு வாரங்கள் மருத்துவர்கள் அவரை ஓய்வு எடுக்க அறிவுறுத்தியதாகவும் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டு தனக்கு நடந்த விபத்து குறித்து விளக்கம் அளித்து இருக்கிறார் விஜய் ஆண்டனி. அதில் அவர், “அன்பு நண்பர்களே, மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பின் போது தாடை மற்றும் மூக்கில் ஏற்பட்ட பலத்த காயத்தில் இருந்து நான் பத்திரமாக மீட்கப்பட்டேன். பெரிய அறுவை சிகிச்சையை முடித்துள்ளேன், கூடிய விரைவில் உங்கள் அனைவரிடமும் பேசுகிறேன். எனது உடல்நிலையில் உங்கள் ஆதரவுக்கும் அக்கறைக்கும் நன்றி” என்று பதிவிட்டு இருக்கிறார். அவர் விரைந்து குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
Dear friends, I am safely recovered from a severe jaw and nose injury during Pichaikkaran 2 shoot in Malaysia.
I just completed a major surgery.
I will talk to you all as soon as possible😊✋
Thank you for all your support and concern for my health🙏❤️ pic.twitter.com/YJm24omxrS— vijayantony (@vijayantony) January 24, 2023