இந்திய-நேபாளத்தை இணைக்கும் பெட்ரோலியம் பைப்லைன் திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் மூலம் இன்று (செவ்வாய்கிழமை) இந்திய பிரதமர் நரேந்திர மோடியும், நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒளியும் அவரவர் அலுவலகங்களிருந்து தொடங்கி வைத்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தோடு தொடர்ந்து பல சேவை பங்களிப்புகளின் மூலம் நெருக்கத்தை இந்தியா மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று தொடங்கப்பட்டுள்ள இந்தியாவின் மோத்திஹரி முதல் நேபாளத்தின் அம்லேக்கஞ்ச் வரையிலான சுமார் 60 கிமீ தூரம் பெட்ரோலியம் அனுப்பும் திட்டமானது தெற்காசியாவின் முதல் எல்லை கடந்த சாதனை திட்டமாக உருவெடுத்து உள்ளது.
மொத்தம் ரூ.325 கோடி மதிப்பில் உருவாகும் இத்திட்டம், பீகாரின் பெகுசராய் மாவட்டத்தில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் இருந்து பெட்ரோல் கொண்டு செல்லப்பட உள்ளது. ஏற்கனவே இந்திய-நேபாளம் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின்படி, கடந்த 1973ஆம் ஆண்டு முதல் டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோலியம் கொண்டு செல்லப்படுகிறது. அதன் பின்னர் மீண்டும் ஏற்பட்ட ஒப்பந்த புரிதலின்படி 1996ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட பைப்லைன் இத்திட்டம் தற்போது முக்கிய கட்டத்தை அடைந்திருக்கிறது. இதன் மூலம் பெட்ரோல் கொண்டு செல்லும் போக்குவரத்து செலவினங்கள் குறையும். அது மட்டுமின்றி நேபாளத்தின் பெட்ரோல் தட்டுப்பாடு பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்ச்சியில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் கலந்துக்கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி, இந்தியா-நேபாளம் இடையிலான எரிசக்தி ஒத்துழைப்பு திட்டம் மூலம் மோதிஹரி-அம்லேக்கஞ்ச் பைப்லைன் இணைப்பை செயல்படுத்தி இருக்கிறோம். இது எங்கள் இருதரப்பின் நெருங்கிய உறவுகளுக்கு அடையாளமாகும். இந்த பிராந்தியத்தின் எரிசக்தி பாதுகாப்பை மேம்படுத்தவும், போக்குவரத்து செலவுகளை கணிசமாகக் குறைக்கவும் இத்திட்டம் பயன்படும் எனவும், தெற்காசியாவில் பெட்ரோல் அனுப்புவதற்காக எல்லைகளை கடந்து அமைக்கப்படும் முதலாவது திட்டமானது, குறிப்பிட்ட காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இருநாடுகளின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த பலன் கிடைத்துள்ளது. 2015-ம் ஆண்டு மிக சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் பாதிப்படைந்த நேபாளத்தை மீள் கட்டமைப்பு செய்யும் பணிகளுக்கு நட்பு நாடான இந்தியா உதவியிருக்கிறது. இந்தியாவின் சார்பாக கூர்கா மற்றும் நுவகோட் மாவட்டங்களில் வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளது எனவும் அவர் பேசினார்.
கிட்டத்தட்ட 1.3 மில்லியன் டன் அளவிலான பெட்ரோலியத்தை நேபால் நாட்டிற்கு வழங்குவதற்கான ஒப்பந்தத்தை இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ‘இந்திய ஆயில் கார்ப்பரேஷன்’ மேற்கொண்டுள்ளது. வரும் 2020 ஆம் ஆண்டு இரு மடங்காக உயருமெனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.