
தெறி, மெர்சல் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து அட்லி மற்றும் விஜய் ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள 3 ஆவது படம் பிகில்.
ஏ.ஜி.எஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்து உள்ளது. இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து இருக்கிறார்.பெண்களின் கால்பந்து விளையாட்டை மையப்படுத்திய இப்படத்தில் விஜய், ராயப்பன், மைக்கேல், பிகில் என்று 3 விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில், இப்படம் எப்போது வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பை தற்போது தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், தளபதியின் பிகில் வரும் அக்டோபர் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் திரைக்கு வரும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். மேலும், விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர். அண்மையில், வெளியான பிகில் படத்தின் டிரைலர் அஜித்தின் விஸ்வாசம் டிரைலர் படைத்த சாதனையை முறியடித்து புதிய சாதனை படைத்துள்ளது. பிகில் டிரைலர் 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.