
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசினால் கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டம்தான் தற்போது இந்தியா முழுக்க பரவலான பேச்சாக மாறியுள்ளது. புதிய மோட்டார் வாகன சட்ட விதிமுறைகள் கடந்த செப்டம்பர் 1 ஆம் முதல் அமலுக்கு வந்தன. இதில், போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கான அபராத தொகைகள் மிக கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரியின் தீவிர முயற்சியால் கொண்டு வரப்பட்ட புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ஆதரவு, எதிர்ப்பு என இரண்டு விதமான விமர்சனங்களும் சரி சமசமாக வந்து கொண்டிருக்கிறது. ஆனால் நாளாக நாளாக எதிர்ப்பு தான் அதிகரித்து கொண்டே செல்கிறது.
போக்குவரத்து விதிமுறை மீறுவதற்க்கான அபராத தொகைகள் முன்பு இருந்ததை விட தற்போது பல மடங்கு உயர்த்தப்பட்டிருப்பதே இதற்கு முக்கிய காரணம். ராஜஸ்தான் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட லாரி ஒன்றுக்கு 1.41 லட்ச ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டிருக்கும் தகவல் தற்போது வெளியாகி கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.புதிய மோட்டார் வாகன சட்டம் அமலுக்கு கொண்டு வரப்பட்ட பிறகு , இந்தியாவில் ஒரு வாகனத்திற்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராத தொகை இதுதான். இதுபோல் பல்வேறு வாகனங்களுக்கும் பல்லாயிரக்கணக்கில் அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. எனவேதான் வாகன ஓட்டிகள் மிக கடுமையான எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர்.
புதிய மோட்டார் வாகன விதிமுறைகளின்படி ஹெல்மெட் அணியாமல் பயணித்தால் நீங்கள் ஆயிரம் ரூபாய் அபராதமாக செலுத்த வேண்டும். ஆனால் குஜராத்தில் இது வாகன ஓட்டிகளின் எதிர்ப்பு காரணமாக தற்போது 500 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சீட் பெல்ட் அணியாமல் பயணித்தாலும், புதிய மோட்டார் வாகன சட்டத்தில் ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதனையும் குஜராத் அரசு 500 ரூபாயாக குறைத்துள்ளது.
ஆரம்பத்தில் மத்திய பிரதேசம், பஞ்சாப் மற்றும் மேற்கு வங்கம் உள்ளிட்ட ஒரு சில மாநில அரசுகள் மட்டுமே புதிய மோட்டார் வாகன சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், தற்போது கேரள மாநில அரசும் எதிர்ப்பு தெரிவி்த்துள்ளது. இந்த மாநிலங்களை போல் அபராதத்தை குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்குமா? என தமிழக வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.