இயக்குனர் என் எஸ் பொன் குமார் இயக்கியிருக்கும் ஆகஸ்ட் 16 1947 திரைப்படம் குறித்த விமர்சனங்களை தற்போது பார்க்கலாம். ஏ ஆர் முருகதாஸ் அவர்களிடம் 8 வருடங்கள் உதவி இயக்குனராக பணிபுரிந்த பொன் குமார் தன்னுடைய முதல் படத்திலேயே தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை நிரூபித்து இருக்கிறார். திருநெல்வேலி பக்கம் ஒரு மலைப்பகுதிகளுக்கு நடுவில் அமைந்திருக்கும் ஒரு கிராமம் தான் செங்காடு. வெளியுலக தொடர்பு சிறிது கூட இல்லாத இந்த கிராம மக்களின் ஒரே ஒரு வருமானத்திற்கான ஆதாரம் பருத்தி நெய்து பிழைப்பது தான். பருத்தி நூல் வளம்மிக்க அந்த கிராமத்தில் ஆங்கிலேயர்களின் பிரதிநிதியாக ராபர்ட் கிளைவ் ஆட்சி செய்து வருகிறார். அதிக லாபம் தரும் பருத்தி நூல் தொழிலை ராபர்ட் கிளைவ் மக்களை மிகவும் கஷ்டப்படுத்தி செய்ய வைக்கிறார். பருத்தியிலிருந்து நூல் எடுக்க தினமும் 16 மணி நேரம் உணவு, குடிக்க தண்ணீர் கூட இல்லாமல் வேலை வாங்கி வருகிறார். சோறு தண்ணீர் கூட கொடுக்காமல் சிறுநீர் கூட கழிக்க விடாமல் 16 மணி நேரமாக கொடூரமாக வேலை வாங்கி வருகிறான் ராபர்ட் கிளைவ்.

இவரை எதிர்த்து கேள்வி கேட்பவர்களுக்கு உடனே மரணம், வேலை செய்யாதவர்களுக்கு சவுக்கடி, உடலில் சுடுநீர் ஊற்றி அபிஷேகம் செய்வது என்று கொடுமைக்காரனாக இருக்கிறான் ராபர்ட் கிளைவ். இவனது மகன் ஜஸ்டின் ஊரில் உள்ள இளம் பெண்கள் யாரேனும் வயதிற்கு வந்துவிட்டால் அவர்களை தனது படுக்கையறைக்கு அழைத்துச் செல்லும் கொடூர குணம் உடையவன். இவர்கள் செய்யும் அனைத்து அட்டூழியங்களுக்கும் அந்த ஊரில் இருக்கும் ஜமீன்தாரும் துணை போகிறார். ஆனால் ஜஸ்டின் இடம் இருந்து தனது மகள் தீபாலியை ஜமீன்தார் மறைத்து வைக்க நினைக்கிறார். அதற்காக தீபாலி சிறுவயதிலேயே இறந்து விட்டதாக பொய் சொல்கிறார். ஒரு கட்டத்தில் ஜமீன்தாரின் மகள் தீபாலி ஜஸ்டின் கண்களில் படுகிறார். அவளை தன்னிடம் அனுப்பி வைக்குமாறு ஜமீன்தாருக்கு ஜஸ்டின் கட்டளையிடுகிறான். இதனால் தனது மகளை உயிரோடு புதைத்து பூமிதானம் செய்கிறார் ஜமீன். இந்த நிலையில் தீபாலியின் மீது சிறு வயதிலிருந்து காதல் கொண்டிருந்த கதாநாயகன் கௌதம் கார்த்திக் அவளைக் காப்பாற்றி அழைத்துச் செல்கிறார். மேலும் ஜஸ்டினை கெளதம் கார்த்தி கொலை செய்து விடுகிறான்.

இதற்கடையிப் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கிறது. இந்த விஷயம் ஆட்சியாளர் ராபர்ட்க்கு தெரிய வர, அந்த செய்தயை கிராம மக்களிடமிருந்து மறைத்து நூல் ஆலை மூலமாக ஆதாயம் தேட நினைக்கிறான். இதற்கிடையில் தனது மகன் ஜஸ்டின் இறந்த செய்தி கிடைத்ததும் அவனைக் கொன்ற கதாநாயகன் கௌதம் கார்த்திக்கை பழிவாங்க வேண்டும் என்று புறப்படுகிறான் ராபர்ட் கிளைவ். இறுதியில் கௌதம் கார்த்திக்கின் நிலை என்ன ஆனது..? சுதந்திரம் கிடைத்த செய்தி செங்காட்டு கிராமத்து மக்களுக்கு கிடைத்ததா? போன்ற கேள்விகள் அனைத்திற்கும் விடையாக “கிளைமாக்ஸ் காட்சிகள் ” அமைந்திருக்கிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் பலரையும் அழ வைத்திருக்கிறது என்று சொன்னால் அது மறுப்பதற்கு இல்லை. கௌதம் கார்த்திக், புகழ் ஆகியோரின் நடிப்பு மிகப் பிரமாதமாக அமைந்திருக்கிறது. கதாநாயகியாக வரும் ரேவதி சர்மா மேக்கப் இல்லாமல் மிக அழகாக காட்சியளிக்கிறார். தனது முதல் படம் என்று சொல்ல முடியாதபடி தனது கதாபாத்திரத்தை உணர்ந்து மிக அழகாக நடித்திருக்கிறார். கௌதம் கார்த்திக் நண்பராக வரும் புகழ் முதல் முறையாக குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருக்கிறார். கிளைமாக்ஸ் காட்சிகளில் கண் கலங்க வைத்திருக்கிறார் புகழ்.

2010 ஆம் ஆண்டு வெளியான மதராசபட்டினம் சுதந்திர காலத்திற்கு ஏற்ற காட்சி அமைப்புகள் மற்றும் ஆடை வடிவமைப்புகளுடன் வெளியானது. அதைவிட கூடுதலாக இந்த படத்தில் மெனக்கிடல்கள் தெரிகிறது. ஆடை வடிவமைப்பு, கிராமஙகளை காட்சிப்படுத்துதல், கூரை வீடு என தொடங்கி சுதந்திர கால நாட்களை காட்டுவதற்கான ஒவ்வொரு காட்சி அமைப்புகளுக்காக மிகுந்த மெனக்கிடல்களை படக்குழு செய்திருப்பது உண்மையில் பாராட்டுக்குரியது. நீண்ட இடைவெளிக்கு பின்னர் நல்ல கதை அம்சத்துடன் கூடிய கதையில் கௌதம் கார்த்திக் நடித்திருப்பது சிறப்பு. நாக்கு அறுபட்ட நிலையில் மக்களிடம் உண்மையைச் சொல்ல போராடும் கௌதம் கார்த்திக் நண்பனாக கைத்தட்டல்களை பெறும் புகழ், இந்த படத்திற்குப் பிறகு இன்னும் உச்சிக்கு செல்வார் என்பதில் ஐயமில்லை. காலத்தைக் கடந்த காட்சியமைப்பு, சுதந்திர காலகட்டத்தில் பட்ட கஷ்டங்கள் போன்றவை அந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் செல்ல வைக்கிறது.

இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் பின்னணி இசை கவனிக்கத்தக்கதாக இருக்கிறது. பாடல்கள் மிக அருமையாக வந்திருக்கிறது. கலை இயக்குனர் சந்தானத்தின் பணி மகத்தானது. இடைவேளைக்குப் பின்பு வைக்கப்பட்டுள்ள சில தேவையற்ற காட்சிகளை நீக்கி இருந்தால் படத்தின் சில இடங்களில் ஏற்படும் தொய்வுகளை நீக்கி இருக்கலாம். இருப்பினும் ரசிகர்களின் கவனத்தை துளிகூட சிதறவிடாமல் நேர்த்தியாக கொண்டு செலுத்தி இருக்கிறார் இயக்குனர் என் எஸ் பொன் குமார். முதல் படத்திலேயே கவனிக்கப்பட வேண்டிய இயக்குனராக மாறிப் போயிருக்கிறார் பொன் குமார். சீக்கிரம் முன்னணி இயக்குனர்களில் பட்டியலில் இடம் பிடித்து விடுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

அந்த காலத்து படம் என்று எந்த இடத்திலும் ரசிகர்களை சோர்வடைய வைக்காமல் திரைக்கதையை நன்றாக செலுத்தி கைதட்டல்களை பெற்றிருக்கிறார் பொன் குமார். சுதந்திரம் கிடைக்கும் செய்தி மக்களுக்கு எப்படியும் தெரிந்துவிடும் என்கிற கிளைமாக்ஸ் இன்னுமே நம்மால் யூகிக்க முடியும். ஆனால் அது மக்களுக்கு எப்படி தெரியப் போகிறது என்ற பதைபதைப்பை உருவாக்கிய பொன் குமாரின் உழைப்பு உண்மையில் பாராட்டத்தக்கது. மொத்தத்தில் வெள்ளையனை வெளயேற்றியது ஆகஸ்ட் 16, 1947. இந்த படத்திற்கு தமிழ்க்ளிட்ஸ் வழங்கும் ரேட்டிங் – 4/5
Youtube Video Embed Code Credits: MovieBuff Tamil