உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலில் இந்தியா முதலிடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஜூலை மாதம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் ஆஸ்திரேலியா, வங்க தேசம், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஸ்ரீலங்கா, மேற்கு இந்திய தீவு ஆகிய 9 அணிகள் விளையாடி வருகின்றன.
இப்போட்டியில், ஒரு அணி குறைந்தபட்சமாக 6 அணிகளுடன் விளையாட வேண்டும். இதில் பாகிஸ்தான் மற்றும் ஸ்ரீலங்கா ஆகிய அணிகளை தவிர மற்ற அணிகளுடன் இந்தியா விளையாட இருக்கிறது.
இந்நிலையில், தற்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2019-2021க்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் ஆணையம் வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் 160 புள்ளிகளுடன் இந்தியா முதலிடத்தை பெற்று இருக்கிறது.

ஏற்கனவே மேற்கு இந்திய அணியுடனான 2 டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி, தற்போது தென் ஆப்பிரிக்கா அணியுடன் விளையாடி வருகிறது. விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றிருந்தது. இதனால் 60 புள்ளிகளை கூடுதலாக பெற்று முதலிடத்தை பெற்றுள்ளது.
தரவரிசையில், 60 புள்ளிகளை பெற்று நியூசிலாந்து, ஸ்ரீலங்கா, அணிகள் அடுத்ததடுத்த இடங்களை பிடித்துள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் 56 புள்ளிகளை பெற்று முறையே 4 மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளன.