ஆறு வருடங்கள் காதலுக்குப் பிறகு நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் இன்று சென்னையில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. கேரளாவைச் சேர்ந்தவர் நயன்தாரா, இவரது இயற்பெயர் டயானா குரியன் படங்களில் நடக்க தொடங்கிய பின்பு நயன்தாரா என்று பெயரை மாற்றிக் கொண்டார். இவர் மலையாளத்தில் சின்னத்திரை தொகுப்பாளினியாக தனது வாழ்க்கையை தொடங்கினார். பின்னர் தமிழில் 2005ம் ஆண்டு ஐயா படத்தில் அறிமுகம் ஆனார். பின்னர் பல வெற்றிப்படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார். தனது கடினமான உழைப்பாலும், நடிப்பு திறமையாலும் இன்று லேடி சூப்பர் ஸ்டார் அளவுக்கு தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார்.

நானும் ரவுடிதான் படத்தில் நடித்துக் கொண்டிருந்த போது இவருக்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் காதல் மலர்ந்தது. ஆனால் ஆரம்பத்தில் இந்த தகவலை இருவரும் வெளிப்படையாக அறிவிக்காமல் மறுத்து வந்தனர். பின்னாளில் இருவரும் காதலிப்பதாக ஒப்புக் கொண்டனர். ஆறு ஆண்டுகளாக இருவரும் திருமணம் ஆகாமலேயே சேர்ந்து வாழ்ந்து வந்தனர். அடிக்கடி திருப்பதிக்கு செல்வது, கேரளாவில் உள்ள கோவில்களுக்கு செல்வது, வெளிநாடுகளுக்கு டூர் செல்வது என்று ஒன்றாக வாழ்ந்து வந்தனர். இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி படங்களை தயாரித்தும் வருகின்றனர்.

ரசிகர்கள் உங்கள் இருவருக்கும் எப்போது திருமணம் என்று கேட்டுக் கொண்டே இருந்தனர். தற்போது இவர்களின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் ஒரு ரிசார்ட்டில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. காலை 10.25 மணிக்கு கெட்டி மேளம் முழங்க இந்து முறைப்படி தாலியை நயன்தாரா கழுத்தில் அணிவித்தார் விக்னேஷ் சிவன். இந்த திருமணத்தில் தமிழின் முண்ணனி நடிகர்களான ரஜினிகாந்த், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, இயக்குனர் மணிரத்னம், விக்ரம் பிரபு, ஏ.ஆர் ரகுமான் உள்ளிட்ட பல பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு வாழ்த்தியுள்ளனர். திருப்பதியில் திருமணத்தை நடத்த திட்டமிட்டு இருந்த நிலையில் பலரும் திருமணத்தில் கலந்து கொள்ள இருந்ததால் மகாபலிபுரத்திற்கு மாற்றி வைத்திருந்தார் விக்னேஷ் சிவன் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் திருமண புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.