விஜய் மக்கள் இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் கடந்த 17ம் தேதி ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. வாயில் புரோட்டாவுடன் உயிரழந்து கிடந்த சடலத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் இறந்து போன அந்த நபருக்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர் தெரிவித்துள்ளார். சென்னை கடற்கரை சாலையில் இருந்த விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் சனிக்கிழமை காலை முதலே பரபரப்பான சூழல் காணப்பட்டது. சென்று பார்த்தபோது அங்கு ஒருவர் சுவரின் ஓரமாக கையிலும் வாயிலும் புரோட்டாவுடன் உயிர்பிரிந்த நிலையில் கிடந்தார்.

பின்னர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் வந்து விசாரித்த போது விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் சில நாட்களாக பெயிண்டிங் வேலை நடந்து கொண்டிருந்தது. அதில் வேலை பார்த்துக் கொண்டிருந்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த பிரபாகரன் என்பவர் உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது. முன்னால் கிடைத்த தகவலின் படி பெயிண்டர் பிரபாகரனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளதாகவும்ஔ கடந்த சனிக்கிழமை குடும்பத்தை பார்ப்பதற்காக சம்பளத்தை பெற்றுக் கொண்டு கிளம்பி சென்றுள்ளார். பின்னர் இரவு மீண்டும் வேலைக்கு வந்த அவர் உரிமையாளரிடம் இரவு சாப்பாட்டுக்காக நூறு ரூபாய் வாங்கியுள்ளார்.

பிறகு சாப்பாட்டை வாங்கிக் கொண்டு விஜய் மக்கள் இயக்கம் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அங்கு அவர் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே மரணமடைந்துள்ளார். அவர் கையிலும், வாயிலும் புரோட்டா இருந்ததை பார்க்கும் போது குடிபோதையில் புரோட்டா சாப்பிடும் போது அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்து இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. அவரது உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்து இருந்தனர். ஆனால் தற்போது விஜய் மக்கள் இயக்கத்தின் பொறுப்பாளரிடம் விசாரித்த போது, இறந்து போன நபர் விஜய் அலுவலகத்தில் பெயிண்ட் அடிக்க வந்தவர் கிடையாது என்றும், அவர் பக்கத்து வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க வந்தவர் என்றும், அவருக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்றும் கூறியுள்ளார்.