விஜய் டிவியின் புகழ் மனைவிக்கு இன்று வளைகாப்பு நடந்துள்ளது. அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ள நிலையில் பலரும் புகழுக்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

தொலைக்காட்சியில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று சொல்லி சென்னைக்கு கிளம்பி வந்தவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் கடலூரில் இருந்து சென்னைக்கு வந்து கலக்கப்போவது யாரு, குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இன்று வெள்ளித்திரை வரை சென்றிருக்கும் ஒரு நபர்தான் புகழ்.

ஆரம்பத்தில் பெண் வேடங்களை மட்டுமே ஏற்று நடித்து வந்த இவரை பலரும் விமர்சித்தது உண்டு. பின்னர் அந்த விமர்சனங்களை எல்லாம் தனக்கு உரமாக்கிக் கொண்டு தொடர்ந்து முன்னேறிக்கொண்டே வந்தார்.

இவருக்கு திருப்புமுனையாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைய, அந்த பிரபலத்தை கொண்டு வெள்ளித் திரையில் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அஜித்துடன் இணைந்து வலிமை, கௌதம் கார்த்திக் உடன் இணைந்து ஆகஸ்ட் 15 1947 போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.

இது மட்டுமில்லாமல் வீட்ல விசேஷம், எதற்கும் துணிந்தவன், யானை, ஏஜென்ட் கண்ணாயிரம், டிஎஸ்பி, அயோத்தி போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். தற்போது ஹீரோவாக மிஸ்டர் ஜூ கீப்பர் என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் இவரது காதலியான பென்சிக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இந்த நிலையில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை சமீபத்தில் அறிவித்திருந்தார் புகழ். அந்த பதிவில், “என்னுடைய வளர்ச்சியில் வழித்துணையாய் வந்தவள், இப்போது என்னை என் வாழ்வின் அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளாள்.

இத்தனை நாட்களில் எத்தனையோ பரிசுகளை எனக்கு அளித்தவள், ஆனால் இன்று அவள் அளித்த பரிசிற்கு ஈடு இணையே இல்லை. என் அனைத்து சுக துக்கங்களிலும் என்னுடன் இருந்தவள் நீ, இனி இன்னொரு உயிரும் நம்முடன் இருக்கப்போகிறது என்று நினைக்கும் போது, இதைவிட பெரிய மகிழ்ச்சி இந்த உலகத்தில் வேறெதுவும் இல்லை, என்னை தகப்பனாக்கிய என் தாயுமானவளுக்கு அன்பு முத்தங்கள். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் அவரது மனைவிக்கு இன்று வளைகாப்பு நடந்து முடித்துள்ளது. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. பலரும் புகழுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

இந்த விழாவிற்கு சிவாங்கி, நாஞ்சில் விஜயன், செய்தி வாசிப்பாளர் ரஞ்சித், குக் வித் கோமாளி பிரபலம் கஜேஷ் மற்றும் விஜய் டிவி நட்சத்திரங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
View this post on Instagram