மலையாள நடிகை ரஜிஷா விஜயன் தற்போது தனது காதலரை அறிமுகப்படுத்தி இருக்கிறார். முதல் முறையாக காதலனுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 2016ம் ஆண்டு வெளியான ‘அனுராக கரிக்கின் வெல்லம்’ என்கிற படத்தின் மூலமாக நடிகையாக அறிமுகமானவர் ரஜிஷா விஜயன்.

அதன்பின்னர் இவர் ‘ஒரு சினிமாக்காரன்’, ‘ஜூன்’, ‘ஃபைனல்ஸ்’, ‘ஸ்டான்ட் அப்’, ‘லவ்’ போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார். அதன் பின்னர் 2021ம் ஆண்டு தமிழில் வெளியான ‘கர்ணன்’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானார். தொடர்ந்து சூர்யா நடிப்பில் வெளியாகிய தேசிய விருது பெற்ற ‘ஜெய் பீம்’, ‘சர்தார்’ படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். கேரளாவை சேர்ந்த இவர் மலையாள படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் ரஜிஷா விஜயன் விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மலையாள படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றி வரும் டோபின் தாமஸ் என்பவரை ரஜிஷா காதலித்து வருகிறார். பல நாட்களாக இவர்கள் இருவரும் காதலித்து வரும் நிலையில், தற்போது ஜோடியாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு காதலை உறுதி செய்திருக்கின்றனர். புகைப்படங்களை பகிர்ந்த டாபின் தாமஸ், “1461 நாட்கள் இன்னும் ஒரு பயணம் செல்ல காத்துக் கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டு இருக்கிறார்.

2021ம் ஆண்டு கோகோ படத்திலும், 2023ம் ஆண்டு ‘லவ் ஃபுலி யுவர்ஸ் வேதா’ என்கிற படத்திலும் ரஜிஷா கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்தார். அப்போது இந்த படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய டாபின் தாமசுடன் இவருக்கு நெருக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. விரைவில் மலையாளத் திரை உலகில் இந்த ஜோடிகளின் திருமணம் நடைபெறும் என்று பலரும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ரசிகர்கள் பலரும் ரிஜிஷாவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.