‘96’ திரைப்படத்தில் ராம் மற்றும் ஜானு என்ற கதாபாத்திரத்தில் நடித்த ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் இருவரும் திருமண கோலத்தில் இருப்பது போன்ற புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இருவரும் திருமணம் செய்து கொண்டார்களோ? என்கிற சந்தேகம் எழுந்த நிலையில், தற்போது அது குறித்து கௌரி கிஷன் தனது சமூக வலைதளத்தில் விளக்கமளித்திருக்கிறார்.

2018ம் ஆண்டு விஜய் சேதுபதி, திரிஷா ஆகியோர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘96’. இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதியின் இளம் வயது கதாபாத்திரத்தில் எம்எஸ் பாஸ்கரின் மகன் ஆதித்யா பாஸ்கரும், திரிஷாவின் இளம் வயது கதாபாத்திரத்தில் கௌரி கிஷனும் நடித்திருந்தனர்.

இருவருக்குமே இது முதல் படம் என்ற போதிலும், முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருவரும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர். இந்த படத்திற்குப் பின்னர் இருவருக்கும் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் வரத் தொடங்கின. தொடர்ந்து ஆதித்யா பாஸ்கருக்கு ‘பாவக்கதைகள்’ என்கிற படத்திலும், கௌரி கிஷனுக்கு ‘அடியே’ என்கிற படத்திலும் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து இருவரும் படத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மீண்டும் ஆதித்யா பாஸ்கர் மற்றும் கௌரி கிஷன் இருவரும் இணைந்து ‘ஹாட்ஸ்பாட்’ என்கிற படத்தில் ஜோடியாக நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வது போன்ற காட்சிகள் இருக்கிறது.

அப்போது மணக்கோலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை கௌரி கிஷன் பதிவிட்டு இருக்கிறார். படத்தின் பிரமோஷனுக்காக அவர் இவ்வாறு பதிவிட்டு இருக்கிறார். ஆனால் இதைப் பார்த்த பலரும் இருவரும் திருமணம் செய்து கொண்டு விட்டார்கள் என்று புரளியை கிளப்பி இருப்பது தெரிய வந்துள்ளது.
View this post on Instagram