
‘குயின்’ என்ற பெயரில் வெப் தொடராக கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இயக்கி உள்ளனர்.
இந்த தொடரில் ஜெயலலிதா கதாபாத்திரத்தை ரம்யா கிருஷ்ணன் எடுத்து நடித்துள்ளார். இந்த வெப் தொடர் தற்போது இணையதளத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாலிவுட் நடிகையான சிமி அகர்வால் ரம்யாகிருஷ்ணனை பேட்டி எடுப்பதுபோல் கதை துவங்குகிறது. பிளாஷ்பேக்கில் சிறுவயதில் ஜெயலலிதா பள்ளியில் படித்த காட்சிகள், படிப்பின் மீது அவருக்கு ஏற்பட்ட ஆர்வம், முதல் மாணவியாக தேர்ச்சி, வீட்டில் நிலவும் வறுமை என்று கதை தொடர்கிறது.
தாய் நிர்ப்பந்தத்தால் விருப்பம் இல்லாமல் சினிமாவில் நடிப்பது, எம்.ஜி.ஆருடன் சந்திப்பு, சினிமாவில் பல சாதனைகள், அரசியல் பிரவேசம், எம்.ஜி.ஆர் மறைவு என்று அடுத்தடுத்த தொடர்களில் ஒரு திரைப்படத்தை பார்ப்பதுபோல் விறுவிறுப்பாகவும் பிரமாண்டமாகவும் காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது.
ரம்யா கிருஷ்ணன் கதாபாத்திரம் இந்த சீரிஸில் சக்தி சேஷாத்திரி என்று குறிப்பிடப்பட்டு உள்ளது. ஜெயலலிதாவின் தாய் கதாபாத்திரத்தில் சோனியா அகர்வால் களம் இறங்க . இளம் வயது ஜெயலலிதாவாக அஞ்சனா ஜெயபிரகாசும் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்தில் இந்திரஜித் சுகுமாரனும் நடித்த வண்ணம் உள்ளனர்.
எஸ்.ஆர்.கதிரின் கேமரா அந்த காலத்தையும் இன்றைய காலத்தையும் வேறுபடுத்தி காட்டி உள்ளது. தர்புகா சிவாவின் பின்னணி இசையும் காட்சியோடு ஒன்ற வைக்கிறது. 13 தொடர்களையும் நேர்த்தியாக படமாக்கி உள்ளனர்.