
விஜய் மற்றும் வெற்றிமாறன் ஆகியோரின் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. இவர்கள் சந்திப்பு குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில், இருவரும் சேர்ந்து படம் பண்ணுவார்களா என்பது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘தளபதி 64’ படத்தை நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்பு, அடுத்த மாதம் இறுதிவரை நடைபெறும் என்று படக்குழுவினர் தெரிவித்தனர். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தில் விஜய்யுடன் மாளவிகா மோகன், விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், கெளரி கிஷன், வி.ஜே.ரம்யா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
இதனையடுத்து விஜய்யின் அடுத்த பட இயக்குநர் யார் என்பது குறித்து பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் வெற்றிமாறன், பேரரசு, மகிழ் திருமேனி உள்ளிட்ட பல இயக்குநர்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது. ஆனால், சமீபத்தில் விஜய் – வெற்றிமாறன் சந்திப்பு நடைபெற்றதாகத் தகவல் வெளியாகி இருந்தது.
அதனை தொடர்ந்து விஜய்க்கு அடுத்த படத்தின் இயக்குநர் வெற்றிமாறன் என்று பலராலும் பேசப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரித்த போது, விஜய் – வெற்றிமாறன் இருவரும் படம் பண்ணுவது தொடர்பாகச் சந்தித்துப் பேசியதை உறுதிப்படுத்தினார்கள். கிட்டதட்ட இந்தக் கூட்டணி உறுதியாகி உள்ளது என்று கூறியுள்ளார்.
அது மட்டுமல்லாமல், எல்ரெட் குமார் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் படத்தில் தான் சூரி நாயகனாக நடிக்கவுள்ளார். அந்தப் படம் முதலில் தொடங்கலாமா, விஜய் படம் தொடங்கலாமா என்ற ஆலோசனையில் இருந்து வருகிறார் வெற்றிமாறன். எந்தப் படம் முதலில் என்பது தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலிருந்து இன்னும் 10 நாட்களில் உறுதியான தகவல் வெளியாகும்.