இந்தியாவின் ஒற்றுமையை பலப்படுத்துவதே மொழியியல் அடிப்படையிலான மாநில அமைப்புகள் தான்.
இக்குழுவின் பரிந்துரையின்படி மொழிவாரிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டு, மொழிகளின் ஒன்றியமாக இந்தியா உருவானது. அதற்கு அடுத்தடுத்த ஆண்டுகளில், மராத்தி மற்றும் குஜராத்தி மொழி பேசும் மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. 1966 ஆம் ஆண்டில், பஞ்சாபி பேசும் பஞ்சாப் மாநிலம் உருவாக்கப்பட்டது. பழைய கிழக்கு பஞ்சாப் மாநிலத்தில் இந்தி பேசும் பகுதிகள் ஹரியானா மாநிலத்தோடு புனரமைக்கப்பட்டன.
இன்றைய கால கட்டத்தில், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெரும்பான்மை மொழி குழுவும் அதற்கான சொந்த மாநிலத்தைக் கொண்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
1956ஆம் ஆண்டு பீகார் (பின்னர் ஜார்கண்ட் மாநிலத்தை உள்ளடக்கியது) மற்றும் மேற்கு வங்கத்தை இணைப்பதற்கான அசாதாரண முயற்சி,தோல்வியடைந்தது. இது பழைய பிரிட்டிஷ் பாணியைப் போல மாநிலத்தைப் பிரிப்பதும், மாநில எல்லைகளை மாற்றுவதும், மாநிலத்தின் மக்கள்தொகையைக் குறிப்பிடாமல் இனி சாத்தியமில்லை என்பதைச் சுட்டிக்காட்டியது. இரண்டு நாடாளுமன்ற இடைத்தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்த பிறகு மேற்கு வங்காள காங்கிரஸ் கட்சியின் முதல் அமைச்சர் இந்த முடிவைக் கைவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் ஆட்சியாளர்கள் மொழியியல் கொள்கையில் அதிக தயக்கத்தைக் காட்டினர். அதேபோல, புதிதாக பிறந்திருந்த பாகிஸ்தானில் மொழியியல் அரசியல் வேரூன்ற அனுமதிக்கவில்லை. பாகிஸ்தானில் உள்ள விஷயங்கள் அதன் வினோதமான புவியியலோடு தொடர்புடையது. இந்தியாவின் இருபுறமும் இரண்டு இறக்கைகள் போலப் பாகிஸ்தானின் எல்லைகள் இருந்தன. பாகிஸ்தானின் கிழக்குப் பகுதி கிட்டத்தட்ட முற்றிலும் வங்காளமாக இருந்தது. அதன் மேற்குப் பிரிவில் பஞ்சாபிகள், சிந்திகள், உருது மொழி, பேசுபவர்கள், பலோச்சிகள் மற்றும் பதான்கள் இருந்தனர். அது போதாது என்பது போல, அரசியல் மற்றும் இராணுவ சக்தி மேற்கில் இருக்கும்போது கிழக்கு பாகிஸ்தானில் மக்களின் தொகை அதிகமாக இருந்தது.

இத்தகைய சிக்கலான அமைப்பு, மொழியியல் இனங்களுக்கு புதிய மாநிலம் என்ற ரீதியில் பாகிஸ்தானுக்குள் அதிகாரம் செலுத்துவதற்கு இன்னும் கூடுதலான அங்கீகாரத்தைக் கொடுத்திருக்க வேண்டும். இருப்பினும், நடைமுறையில், அந்நாட்டின் புதிய தலைவர்கள் வேறு வழியில் செல்ல முடிவு செய்கிறார்கள். 1948 இல் டாக்காவில் நடந்த ஒரு கூட்டத்தின் உரையில், அந்நாட்டின் உருவாக்கச் சக்தியான முகமது அலி ஜின்னா, “பாகிஸ்தானின் நாட்டின் தேசிய மொழியாக உருது மொழி இருக்கப் போகிறது, வேறு எந்த மொழிக்கும் இடமில்லை” என்று அறிவித்தார்.
முகமது அலி ஜின்னா ஜூன் 3, 1947 ஆம் ஆண்டு அகில இந்திய வானொலியில் பாகிஸ்தான் உருப்பெற்றதாக அறிவித்தார். இன்றைய காலகட்டத்தில், அமித்ஷாவை போலவே, ஒரு தேசிய மொழி நாட்டின் பாதுகாப்பையும், ஒற்றுமையையும் உறுதிசெய்கிறது என்று ஜின்னா நினைத்தார்: “ஒரு மாநில மொழி இல்லாமல், எந்தவொரு தேசமும் ஒன்றிணைந்து செயல்பட முடியாது” என்று தெரிவித்தார். (இவர்கள் இருவற்கிடையிலான ஒற்றுமை: ஜின்னா மற்றும் அமித்ஷா இருவரும் இந்தி பேசும் குஜராத்திகள். மொழியை ஊக்குவிக்கும் போதும் இந்தி மற்றும் உருது மொழிகளை விமர்சித்தவர்கள்.)
பாகிஸ்தான் இந்த பாதையில் தொடர்ந்து சொல்ல முடிவெடுத்தது. இது மொழிவாரியான மாநிலங்கள் என்ற கருத்தை நிராகரித்தது மட்டுமல்லாமல், 1954 ஆம் ஆண்டில் “ஒரே அடையாளம்” என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கு பாகிஸ்தானின் நான்கு மாகாணங்களையும் ஒன்றிணைத்தது.
“இந்நாட்டில் இனி மேல் வங்காளிகள் இல்லை, பஞ்சாபியர்கள் இல்லை, சிந்திகள் இல்லை, பதான்கள் இல்லை, பலூச்சிகள் இல்லை, பஹவல்பூரிஸ் இல்லை, கைர்பூரிஸ் இல்லை. இந்த குழுக்கள் காணாமல் போவது பாகிஸ்தானின் ஒருமைப்பாட்டைப் பலப்படுத்தும்” என்றார் ஜின்னா.
ஒற்றையாட்சி அடையாளத்தை உருவாக்கும் இந்த முயற்சி அங்குப் பலனளிக்கவில்லை. உண்மையில் சொல்லப்போனால், பாகிஸ்தான் அதன் பிரகடனத்திலிருந்து பின்வாங்கத் தொடங்கியது. 1971ஆம் ஆண்டு, வங்காளிகள் பாகிஸ்தானிலிருந்து பிரிந்து வங்க தேசமாக உருவெடுத்தனர். மேலும், இந்த ஒற்றையாட்சி மயமாக்கல் சிந்தி மக்களிடையே அதிருப்தியையும், கோபத்தையும் ஏற்படுத்தியது. அது ஒற்றை அடையாளத்தின் ஒரு பகுதியாகச் சிந்தி தேசியவாதத்தை உருவாக்கம் செய்தது. பின்னர் இது பெரும் பிரிவினைவாதமாக வலம் வந்தது குறிப்பிடத்தக்கது.
ஒரே தேசம், ஒரே மொழி,ஒரே கட்சி, ஒரே ஆட்சி போன்ற ஒற்றை மயமாக்கல் முறை மேற்குலக நாடுகளில் தோல்வியடைந்த திட்டமாகும்!
மொழியியல் பன்முகத்தன்மையில் ஒற்றுமை:
இதற்கிடையில் இந்தியாவில், மொழி மாநில உரிமைகளை நிறுவிய தலைவர்களால் ஒற்றை மயமாக்கல் முறை முற்றிலும் தவறானது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. அடிமட்ட மக்கள் தளத்திலிருந்து எழுந்த அழுத்தங்கள், மொழியியல் மாநிலங்களை உருவாக்க இந்தியத் தேசிய தலைவர்களை நிர்பந்தப்படுத்தியது. இவை தான் இந்தியாவின் ஒற்றுமைக்கு இன்றும் சாதகமான சக்தியாக இருக்கின்றன. பாகிஸ்தான் தனது பிரதேச மொழியியல் அடையாளத்தை முடுக்கிவிட முயன்றபோது தான், அதன் அண்டை நாட்டில் மொழி தேசியவாதத்தையும், இந்தியத் தேசியவாதத்தையும் ஒருங்கே பின்னிப் பிணைத்தன.

மொத்த மொழிவாரியான மாநிலங்களால் தான் இந்தியா கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆகவே இங்கு, ஒருவர் மொழியியல் அடையாளத்துடனும், இந்தியர் என்ற அடையாளத்துடனும் இருப்பதில் எந்த சிக்கலும் எழுந்துவிடப் போவதில்லை.
வரலாற்றை ஒருமுறை பின்னோக்கி பார்த்தால், மேற்குலக பாணியிலான ஒற்றையாட்சி தேசியவாதம் என்பது உண்மையில் இந்தியத் துணைக் கண்டத்தைப் பிளவுபடுத்தும் சக்தி என்பது தெளிவாகிறது. மொழியியல் பன்முகத்தன்மையும், அதன் மொழியின் அடிப்படையிலும் கட்டமைக்கப்பட்ட மாநிலங்களுக்கு போதுமான அதிகாரப் பகிர்வு செய்வதே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கு வழிவகை செய்யும். பாகிஸ்தானில் கொண்டு வரப்பட்ட “ஒரு மொழி, ஒரு இனம்” என்ற கொள்கை போல, இந்தியாவில் மற்ற மொழிகளை விட மத்திய அமைச்சர் அமித்ஷா இந்தியை மேலானதாக முன்னிலைப்படுத்தும் போது, பாகிஸ்தானின் நிலைக்குப் இந்நாட்டை பின்னோக்கி இழுத்துச் செல்லும் என்பது குறிப்பிடவேண்டிய கடமையாகும்.
முற்றும்…
ஆங்கிலத்தில் சோயிப் டானியல்
தமிழில் தமிழ்முரசு
நன்றி Scroll.in
இதன் முந்தைய தொடரை படிக்க இங்கே கிளிக் செய்யவும்…