டெல்லியில் நடந்த அமைதிப் பேரணியில் மீண்டும் போராட்டக்காரர்கள் மற்றும் போலீசார் களுக்கு இடையே வன்முறை ஏற்பட்டுள்ளது.
தேசிய குடிமக்கள் திருத்த சட்டம் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து டெல்லி இயங்கிவரும் ஜாமியா பல்கலைக்கழக மாணவர்களுக்கு எதிராக காவல் துறை மேற்கொண்ட கண்மூடித்தனமான போக்கினைக் கண்டித்து போராட்டம் வலுத்து வருகிறது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள சிலம்பூர் மற்றும் ஜாப்ராபாத் ஆகிய பகுதிகளில் இன்று போராட்டம் நடைபெற்றது. அதில் மக்கள் ஒன்று கூடி அமைதியாக பேரணி நடையஏற்றுக்கொண்டிருந்தது. ஆனால் அவர்கள் மீது காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இதனால் அங்கு கூடி இருந்த மக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்களும் பதிலுக்கு காவல்துறையினர் மீது செங்கற்களை வீசினர்.
இதனால் டெல்லியில் மீண்டும் பதற்றமான சூழ்நிலை உருவாகி உள்ளது. அமைதியாக பேரணி சென்ற மக்கள் மீது காவல்துறை கையாண்ட அடக்குமுறை போக்கு கலவரத்தை தூண்டியதாக கூறப்படுகிறது. மேலும் இந்த வன்முறையில் சுமார் 22 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.